அரசு ஆஸ்பத்திரிக்குள் தண்ணீர் புகுந்தது: நோயாளிகள் கடும் அவதி

ராசிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டியது. இதனால் அரசு ஆஸ்பத்திரிக்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.

Update: 2022-08-29 21:39 GMT

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவும் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கனமழையால் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். மேலும் மழையால் தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் இரவில் தூக்கத்தை இழந்து மக்கள் தவித்தனர்.

ஆஸ்பத்திரிக்குள் தண்ணீர் புகுந்தது

இதனிடையே கனமழை காரணமாக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியை தண்ணீர் சூழ்ந்தது. ஆஸ்பத்திரிக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. பிரசவ வார்டு உள்பட 4 வார்டுகளில் தண்ணீர் புகுந்து குளம்போல் தேங்கியது. இதனால் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிரசவ வார்டுக்குள் புகுந்த தண்ணீரால் அங்கிருந்த கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் அவர்கள் கொண்டு வந்த பொருட்கள் தண்ணீரில் மிதந்தன. இதனால் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுடன் செய்வதறியாது திகைத்தனர். அவர்களை ஆஸ்பத்திரி ஊழியர்கள் வேறு வார்டுக்கு பத்திரமாக மாற்றினர்.

இதேபோல் பெண்கள் வார்டிலும் தண்ணீர் புகுந்து நோயாளிகளின் கட்டில்களை சூழ்ந்து நின்றது. இதையடுத்து அவர்களை ஆஸ்பத்திரி ஊழியர்கள் வேறு வார்டுகளுக்கு மாற்றினர். சிலர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்களது உறவினர்களை கைகளில் தூக்கியவாறு வேறு வார்டுகளுக்கு கொண்டு சென்றனர். ராசிபுரத்தில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 20 செ.மீட்டர் மழை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேகேப்பள்ளியில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு புதிதாக கட்டப்படும் ஒரு வீட்டை வெள்ளம் சூழ்ந்தது. இதில் அங்கு தங்கியிருந்த குழந்தைகள் உள்பட 8 பேர் சிக்கினர். அவர்களை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்