தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வேப்பங்கநேரியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கேட்டுக்கொண்டார்.;

Update:2023-03-22 21:53 IST

கிராமசபை கூட்டம்

கே.வி.குப்பத்தை அடுத்த வேப்பங்கநேரி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், தாசில்தார் அ.கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.கல்பனா, பெ.மனோகரன், ஒன்றிய குழுத் தலைவர் லோ.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.வி.கே.மோகன் வரவேற்றார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். கோடை காலங்களில் தண்ணீர் குறைவாகக் கிடைக்கும். அதற்கு ஏற்ற பயிர் வகைகளைப் பயிரிட வேண்டும். தண்ணீர் அதிகம் கிடைக்கும் மழைக்காலங்களில் அதற்கேற்ப அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர் வகைகளைப் பயிர் செய்ய வேண்டும். வீணாக வெளியேறும் கழிவு நீரை வீட்டின் அருகில் உள்ள செடி, கொடி, மரங்களுக்கு செல்லுமாறு கால்வாய் மூலம் திருப்ப வேண்டும். முதியோர் உதவித்தொகை, தொகுப்பு வீடுகள் பெற விரும்புவோர் ஆன்லைன் மூலம் இ-சேவை மையத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது சத்தான குழந்தைகளுக்கான பரிசுகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

கலெக்டர் ஆய்வு

இதைத் தொடர்ந்து தாலுகா அலுவலக ஊழியர்களுக்கு குடியிருப்புகள் கட்டுவதற்கான இடத்தை, நில வரைபட உதவியுடன், பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாலுகா அலுவலகத்தின் பின்புறத்தில் ஆபத்தான நிலையில் தரை கிணறு உள்ளது. அது தண்ணீர் நிரம்பி நல்ல நிலையில் உள்ளது. அதற்கு மூடி அமைத்து பாதுகாப்பு தரவேண்டும் என்று ஒன்றிய குழு தலைவர் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து கோழிகளின் இறகுகள், மாமிசக் கழிவுகள் மூட்டைகளாகக் கட்டி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பல இடங்களில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவற்றைக் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மண்டல துணை தாசில்தார் ப.சங்கர், ஒன்றியக்குழு உறுப்பினர் கே.சீதாராமன், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வினித்மேக்தலின், மாவட்ட திட்ட அலுவலர் (பொறுப்பு) பா.சுஜாதா, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ர.மைதிலி, வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் அனீஸ்குமார் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்