குற்றவாளி எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்; முதல்-அமைச்சர் உறுதி

குற்றவாளி எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. நிச்சயம் காப்பாற்ற மாட்டோம் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2023-04-21 22:37 GMT

சென்னை,

உள்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் 12 பேர் பேசி இருக்கிறார்கள். பாராட்டி பேசி இருந்தாலும், விமர்சித்து பேசி இருந்தாலும் இரண்டு தரப்புக்கும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சில காவலர்களின் செயல்பாடுகள் குறித்து இங்கே விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இதுபற்றி பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டதை, இதே அவையில் பேசியதை நான் நினைவூட்ட விரும்புகிறேன். "எந்த சமுதாயத்தில் இருந்து போலீஸ் படையினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ, அந்தச் சமுதாயத்தை பிரதிபலிக்கின்ற நிலைக் கண்ணாடியாக அந்தப் படையினர் விளங்குவார்கள். அந்தச் சமுதாயத்தில் இருந்து வெகுதூரம் அவர்கள் விலகி இருப்பது இல்லை.

சமுதாயத்தின் தன்மை

போலீஸ் படை நன்றாக நேர்த்தியாகச் செயல்படுகிறது என்றால், அது சமுதாயத்தின் தன்மையைக் காட்டும். அதேபோல் போலீஸ் படையினர் எங்கேனும் செயலாற்றுவதில் தவறு இழைத்தால், சமுதாயத்தில் நிலவும் குறைபாட்டையே அவை காட்டுகின்றன. தங்களால் உருவாக்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். முரண்பாடு ஏற்படுகின்ற இடங்களில் எல்லாம் அவர்கள் இருந்தாக வேண்டியிருக்கிறது.

சகல விதத்திலும் சகிப்புத் தன்மையோடு அவர்கள் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது. உள்ளக் கொந்தளிப்பு அடையாமல் பற்றற்ற அமைதியுடன் நடந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். பெற்ற பயிற்சிக்கு ஒப்ப, கடமை உணர்ச்சி மிக்கவர்களாக அவர்கள் நடந்துகொள்ள வேண்டி இருக்கிறது" என்று பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டார். அப்படித்தான் காவல் துறையினர் நடந்து வருகிறார்கள்.

காப்பாற்ற மாட்டோம்

அவர்களது செயல்பாட்டில் குற்றங்குறைகள் இருக்கலாம். குறையே இல்லை என்று நான் சொல்லமாட்டேன். குறை கண்டுபிடிக்கப்பட்டதும், அவை திருத்தப்பட்டனவே தவிர, கண்டும் காணாமல் விடப்படவில்லை. சம்பவம் நடந்ததும் குற்றவாளி தப்பிவிட்டார் என்றோ, குற்றவாளியைக் கைது செய்யவில்லை என்றோ, குற்றவாளியைக் காப்பாற்றினார்கள் என்றோ புகார் இருந்தால் சொல்லுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன், அதில் உறுதியாக நான் இருக்கிறேன்.

எந்தக் குற்றவாளியையும், அது யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும், அவர்களை நாங்கள் நிச்சயமாக காப்பாற்ற மாட்டோம் என்று உறுதியாகக் கூறுகிறேன். சிறுசிறு தவறுகள் நடந்திருந்தாலும், அதனைத் திருத்திக் கொள்ளும் பண்பை காவல் துறையினர் பெற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்