களை இழந்த காய்கறி மார்க்கெட்

கேரள வியாபாரிகள் வராததால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் களை இழந்து காணப்பட்டது.

Update: 2023-04-20 19:00 GMT

தென்தமிழகத்திலேயே பிரசித்தி பெற்ற ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்துக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. குறிப்பாக கேரள மாநிலத்தின் 70 சதவீத காய்கறி தேவைகளை ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பூர்த்தி செய்து வருகிறது. இதற்காக தினமும் 100 முதல் 120 லாரிகளில் கேரளாவுக்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்தநிலையில் நாளை (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதன் எதிரொலியாக கடந்த 2 நாட்களாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து அதிக அளவு லாரிகளில் காய்கறிகள் கேரளாவுக்கு சென்றன. ஆனால் நேற்று கேரள வியாபாரிகள் யாரும் வராததால் மார்க்கெட் வெறிச்சோடியது. இதுதொடர்பாக உள்ளூர் விவசாயிகளிடமும் ஏற்கனவே தெரிவித்து விட்டதால் அவர்களும் காய்கறிகளை கொண்டு வரவில்லை. இதனால் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட், களை இழந்து காணப்பட்டது. தினமும் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் மார்க்கெட்டில், வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அடுத்த 2 நாட்களும் மார்க்கெட்டில் காய்கறி விற்பனை நடைபெறாது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்