2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

உடன்குடியில் காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.;

Update:2022-07-16 21:45 IST

உடன்குடி:

உடன்குடியில் காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

காமராஜர் பிறந்தநாள்

உடன்குடி சுற்றுவட்டார காமராஜர் நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா உடன்குடி மேல பஜாரில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதியம் 2 ஆயிரம் பேருக்கு பொது விரு ந்து நடந்தது. பின்னர் இரவில் நடந்த விழாவிற்கு அமைப்பின் தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் நடராஜன், சிவசுப்பிரமணியன், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன்குடி பேரூராட்சி துணை தலைவர் சந்தையடியூர் மால் ராஜேஷ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு காமராஜரின் வாழ்கை வரலாறு பற்றி விரிவாக பேசினார். தொடர்ந்து 10, 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு தங்கப்பதக்கம், ஊக்கப்பரிசுகள் ஆகியவற்றை வழங்கினார்.

பி்ன்னர் மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடைகள், பெண்களுக்கு சேலைகள் உள்பட சுமார் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தி.மு.க. மாணவரணி மாநில துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட பொருளாளர் வி.பி.ராமநாதன், உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங், கிறிஸ்தியா நகரம் ஜான் பாஸ்கர் உள்பட அமைப்பு நிர்வாகிகள் மற்றும் கட்சி பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கீழத்திருச்செந்தூர் கிராமம் சங்கிவிளையில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி வரவேற்று பேசினார்.

விழாவில், சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 85 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவும், 3 பயனாளிகளுக்கு ஆக்கிரமிப்பு வரன்முறை செய்த பட்டாவும் வழங்கினார். மேலும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 33 பயனாளிகளுக்கு உதவி தொகைக்கான ஆணையும், 3 பயனாளிகளுக்கு குடும்ப அட்டையும் என மொத்தம் 124 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 3 லட்சத்து 92 ஆயிரத்து 30 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

விழாவில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 7 நபர்களுக்கு மட்டும் மேடையில் வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கி விட்டு, மேடையில் இருந்து இறங்கி முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்ட இடம்

அரசால் பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்கும் விழா பெரும்பாலும் அரசு அலுவலகங்கள், தனியார் மண்டபத்தில் நடைபெறும். ஆனால் திருச்செந்தூர் தாலுகாவில் நேற்று நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழா பயனாளிகளுக்கு பட்டா இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் வைத்து நடந்தது. மேலும் பயனாளிகள் எளிதில் இடத்தை கண்டு கொள்ளும் வகையில் 4 பக்கமும் கால்கள் நட்டி பட்டாவில் குறிப்பிட்டுள்ள பிளாட் எண் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் முதல் முறையாக திருச்செந்தூர் தாலுகாவில் மட்டும்தான் நடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.3.30 கோடியில் சாலை

திருச்செந்தூர் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை மூலம் ஒருங்கிணைந்த சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பில் காயாமொழி - கச்சனாவிளை வரையிலான சாலை புதுப்பிக்கும் பணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்த சாலையின் மூலம் காயாமொழி, பூச்சிக்காடு, செங்குழி, மேலகாணம், செந்தாமரைவிளை, கச்சனாவிளை, புன்னைநகர் உள்ளிட்ட கிராம மக்கள் பயன் பெறுவார்கள்.

திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வதனாள், நகராட்சி ஆணையர் வேலவன், மண்டல துணை தாசில்தார் கோபால், வட்ட வழங்கல் அலுவலர் சங்கரநாராயணன், வருவாய் ஆய்வாளர் மணிகண்டவேல், நெடுஞ்சாலை துறை தூத்துக்குடி கோட்ட பொறியாளர் ஆறுமுகநயினார், திருச்செந்தூர் உதவி கோட்ட பொறியாளர் விஜய சுரேஷ்குமார், உதவி பொறியாளர் சிபின், மாநில தி.மு.க. மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மேலாத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்