மாவட்டம் முழுவதும் விடிய விடிய பரவலாக மழை

கடலூர் மாவட்டம் முழுவதும் விடிய விடிய பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மே.மாத்தூரில் 50 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Update: 2022-09-08 16:16 GMT

கடலூர்:

மத்திய வங்க கடலின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளில் மாறி மாறி பயணித்து வலுவடைந்து ஆந்திரா அல்லது ஒடிசா கடலோர பகுதிகளில் 11-ந் தேதி கரையை கடக்கக்கூடும் எனவும், இதன் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூரில் நேற்று மாலை மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு 9 மணி வரை தூறிக் கொண்டே இருந்தது. அதன் பிறகு திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை இரவு 10 மணி வரை நீடித்தது. அதன் பிறகு அதிகாலை வரை விடிய விடிய சாரல் மழையாகவும், அவ்வப்போது பலத்த மழையாகவும் பெய்தது.

இந்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், தாழ்வான பகுதிகளில் தேங்கிநின்றது. மேலும் பகலில் மழை முற்றிலும் ஓய்ந்து, வெயில் அடிக்க தொடங்கியது. இதனால் தேங்கிய மழைநீர் வடிய தொடங்கியது. இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், திட்டக்குடி, பரங்கிப்பேட்டை உள்பட மாவட்டம் முழுவதும் விடிய விடிய பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக மே.மாத்தூரில் 50 மி.மீட்டரும், குறைந்தபட்சமாக சிதம்பரத்தில் 0.8 மி.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்