மூடப்பட்ட அரசு பள்ளியில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படுமா?
வால்பாறை முடீஸ் பகுதியில் மூடப்பட்ட அரசு பள்ளி கட்டிடத்தில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.;
வால்பாறை,
வால்பாறை முடீஸ் பகுதியில் மூடப்பட்ட அரசு பள்ளி கட்டிடத்தில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பள்ளி மூடல்
வால்பாறை அருகே முடீஸ் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இங்கு தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் படித்து வந்தனர். அப்பகுதியில் வனவிலங்குகள் தொல்லை காரணமாகவும், குறைந்தபட்ச கூலி கிடைத்ததாலும் தோட்ட தொழிலாளர்கள் வால்பாறையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து சென்று வருகின்றனர். இதனால் அரசு பள்ளியில் மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைந்தது.
இதன் காரணமாக முடீஸ் அரசு மேல்நிலை பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு போதுமான மாணவ-மாணவிகள் இல்லாததால், கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த பள்ளி மூடப்பட்டது. அதன் பின்னர் வேறு எந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படாததால் பள்ளி வளாகம், வகுப்பறையில் புதர் மண்டி காட்சி அளிக்கிறது. மேலும் விஷ ஜந்துக்களிடம் புகலிடமாக மாறி உள்ளது. மேலும் சமூக விரோதிகள் அங்கு அமர்ந்திருந்து மது அருந்தி விட்டு மது பாட்டில்களை வீசி விட்டு செல்கின்றனர்.
தொழிற்பயிற்சி நிலையம்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், மூடப்பட்ட அரசு பள்ளியில் தொழிற்சாலை தொடங்க வேண்டும். அல்லது விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். அனைத்து தொழில் பாடப்பிரிவுகளுடன் மாணவ-மாணவிகளுக்கு தங்கும் விடுதிகளுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும். முடீஸ் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை, முடீஸ் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு மாற்றி அமைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய தாய் சேய் நல மையமாக மாற்றலாம்.
பயனற்ற நிலையில்...
ஆனால், அரசு பள்ளி கட்டிடம் கடந்த 5 ஆண்டுகளாக பயனற்ற நிலையில் இருந்து வருகிறது. எனவே, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து பயனற்ற நிலையில் இருக்கும் அரசு பள்ளி வளாகத்தை பொதுமக்கள், மாணவ-மாணவிகள், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பயன்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.