பொலிவிழந்து காணப்படும் ஆழித்தேரின் கண்ணாடி கூண்டு சீரமைக்கப்படுமா?

திருவாரூர் ஆழித்தேரின் கண்ணாடி கூண்டு பளப்பளப்பை இழந்து கலா் மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-11 18:45 GMT


திருவாரூர் ஆழித்தேரின் கண்ணாடி கூண்டு பளப்பளப்பை இழந்து கலா் மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசியாவில் பெரிய தேர்

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. சிறப்புமிக்க இந்த கோவிலில் நடக்கும் ஆழித்தேரோட்டம் உலகப்புகழ் பெற்றது. எண்கோண வடிவில் அமைந்த இந்த ஆழித்தேர், 4 நிலைகளையும், 7 அடுக்குகளையும் கொண்டது. தேரை இழுத்துச் செல்வது போல அமைந்த 4 குதிரைகள், 32 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்டவை. தேரை இழுக்க 4 வடங்கள் பொருத்தப்படும். இவை ஒவ்வொன்றும் 425 அடி நீளம் கொண்டவை. கயிற்றின் சுற்றளவு 21 அங்குலம் ஆகும். 'திருவாரூர் தேரழகு' என்பது சொல் வழக்கு.

4 வடங்கள்

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் இது. அலங்கரிக்கப்பட்ட இந்த தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

தேரை இழுக்க சுமார் 21 அங்குலம் சுற்றளவு கொண்ட 425 அடி நீளம் கொண்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம். திருவாரூர் வீதிகளில் ஆழித்தேர் அசைந்தாடி வரும் அழகை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் ஆழித்தேரோட்ட விழா திருவாரூரில் விமரிசையாக கொண்டாடப்படும்.

கண்ணாடி கூண்டு

தேரோட்டத்திற்கு பின்னர் இரும்பு தகட்டினால் ஆன மேற்கூரை மூலம் ஆழித்தேரை மூடுவது வழக்கம். இதனால் பிரமாண்டமான ஆழித்தேரின் அழகிய தோற்றத்தை சாதாரண நாட்களில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாமல் போனது. ஆழித்தேரை எந்த நேரத்திலும் அனைவரும் காணும் வகையில் கண்ணாடி கூண்டு அமைக்க இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டது. இதற்காக கடந்த 2019-ம் ஆண்டு ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதன் படி தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது. இதன் மூலம் பக்தர்கள் அனைவரும் பிரமாண்டமான ஆழித்தேரை அனைத்து நாட்களிலும் கண்டு மகிழ்ந்தனர். இதன் படி ஒவ்வாறு ஆண்டும் தேரோட்டத்தின் போது கண்ணாடி கூண்டு பிரிக்கப்பட்டு தேர் வெளியே கொண்டு வரப்படும்.

கடந்த சில மாதங்களாக ஆழித்தேரை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிகளில் வர்ணம் மங்கி ஆழித்தேரை வெளியில் இருந்து சரிவர பார்க்க முடியாத நிலையே இருந்து வருகிறது. இதனால் பக்தர்கள் ஆழித்தேரின் அழகை கண்டு ரசிக்க முடியாமல் வேதனையில் உள்ளனர். எனவே பொதுமக்கள் ஆழித்தேரை கண்டு களிக்கும் வகையில் முறையான கண்ணாடி கூடு வசதியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பளபளப்பை இழந்து விட்டது

இது குறித்து திருவாரூரை சேர்ந்த கருணா கூறியதாவது:-

உலக பிரசித்தி பெற்ற ஆழித்தேரின் அழகை பொதுமக்கள் கண்டு ரசிப்பதற்காகவே கண்ணாடி கூண்டு அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. கண்ணாடி கூண்டு தரமானதாக இல்லை. 3 வருடங்களிலேயே கண்ணாடிக் கூண்டு தனது பளபளப்பை இழந்து மங்கி விட்டது. இதனால் பக்தர்கள் ஆழித்தேரின் அழகை ரசிக்க முடியாமல் உள்ளது. எனவே தரமான முறையில் கண்ணாடி கூண்டு அமைத்து ஆழித்தேரின் அழகை ரசிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்