குறுகலான மகிமலை ஆற்றுப்பாலம் அகலப்படுத்தப்படுமா?

1957-ம் ஆண்டு கட்டப்பட்ட குறுகலான மகிமலை ஆற்றுப்பாலம் அகலப்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-04-08 18:45 GMT

குத்தாலம்:

1957-ம் ஆண்டு கட்டப்பட்ட குறுகலான மகிமலை ஆற்றுப்பாலம் அகலப்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மகிமலை ஆற்றுப்பாலம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் கடக்கம் ஊராட்சியையும், செம்பனார்கோவில் ஒன்றியம் அன்னவாசல் ஊராட்சி கழனிவாசல் பகுதியை இணைக்கும் மகிமலை ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த பாலத்தை பெரம்பூர், கிளியனூர், கடக்கம், எடக்குடி சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் பெரம்பூர் காவல் நிலையம், தரங்கம்பாடி தாலுகா அலுவலகம், மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி, நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வரவும், விவசாயிகள் விவசாய இடுபொருள்கள் வாங்கவும் வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தவும் இந்த சாலையே பிரதான சாலையாக உள்ளது.

1957 -ம் ஆண்டு கட்டப்பட்டது

இத்தகைய பயன்பாடுகள் கொண்ட இந்த பாலம் கடந்த 1957 -ம் ஆண்டு அன்றைய காலகட்டத்தில் இருந்த மக்கள் தொகை, வாகன பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த பாலம் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் அமையவில்லை.

மேலும் பாலத்தை ஒட்டிய பகுதியில் மண் சரிந்து பெரும் பள்ளம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், இலகுரக, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தையும் ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக இரவு நேரத்தில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

அரசு பஸ் போக்குவரத்து சேவை இல்லை

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.மேலும் கழனிவாசல் பகுதிக்கு நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து அரசு பஸ் பொதுப்போக்குவரத்து சேவை இல்லை.

இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மங்கநல்லூர் சுற்றி மன்னன்பந்தல் வரும் நிலை உள்ளது. மேலும் மங்கநல்லூர் வழியாக செல்வதால் சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்படுகிறது.

புதிய அகலமான பாலம்

இது தொடர்பாக சமபந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே 1957-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலத்தை அகற்றிவிட்டு, புதிதாக பாலம் கட்ட வேண்டும். குறிப்பாக பழைய பாலத்தை விட அகலமான பாலமாக கட்டித்தர வேண்டும் மற்றும் அரசு பஸ் பொதுப்போக்குவரத்து சேவையை ஏற்படுத்தி தரவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்