தர்மபுரி அருகே ஏ.கொல்லஅள்ளி ஊராட்சி மொடக்கேரி கிராமத்தில் உள்ள ஜல்லி கிரசர் பகுதியில் சுமார் 250 குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் அரசு டாஸ்மாக் கடை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர், டாஸ்மாக் மாவட்ட மேலாளர், போலீஸ் நிலையம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரியிடம் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு கொடுத்தனர். இருப்பினும் மதுபானக் கடையை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சம்பந்தப்பட்ட கடைக்கு மதுபாட்டில்களை கொண்டு வந்து அடுக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தகவல் பரவியது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தனியார் கட்டிட பகுதியில் திரண்டனர். பின்னர் இரவு முழுவதும் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடிய விடிய பொதுமக்கள் அங்கேயே நின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மதுபாட்டில்கள் கொண்டு வரும் முயற்சியை கைவிட்டதாக கூறப்படுகிறது.