பாலத்தில் கார் மோதி பெண் சாவு
தேனி அருகே பாலத்தில் கார் மோதியத்தில் பெண் உயிரிழந்தார்.;
சின்னமனூர் உப்புக்கிணற்று தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 31). இவர் ஒரு கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வைத்தீஸ்வரி (30). நாகராஜன் நேற்று முன்தினம் இரவு தனது மனைவியுடன் காரில் பெரியகுளம் சென்று விட்டு மீண்டும் சின்னமனூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார். ஆதிபட்டி பாலம் அருகில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நாகராஜன், வைத்தீஸ்வரி இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வைத்தீஸ்வரி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.