திருமண மோசடியில் ஈடுபட்ட பெண் கோவையில் பதுங்கல்?

எடப்பாடி அருகே திருமண மோசடியில் ஈடுபட்ட பெண் கோவையில் பதுங்கி இருக்கலாம் என்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-09-28 20:23 GMT

எடப்பாடி:-

எடப்பாடி அருகே திருமண மோசடியில் ஈடுபட்ட பெண் கோவையில் பதுங்கி இருக்கலாம் என்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண மோசடி

எடப்பாடி அடுத்த சாணாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 48), லாரி டிரைவர். இவருடைய மனைவி ரம்யா. இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். இதனால் மறுமணம் செய்ய முடிவு செய்த செந்தில், ஆன்லைனில் திருமண செயலி ஒன்றில் பதிவு செய்து வரன் தேடினார்.

இந்நிலையில் ஆன்லைன் வழியாக அவரிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட பெண் ஒருவர், அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி சேலம் அருகே உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஒரு நாள் அவருடன் இருந்த பெண், லாரி டிரைவர் செந்தில் வீட்டில் இருந்த 4½ பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம், செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு திடீரென மாயமானார். இது குறித்து எடப்பாடி போலீசார் நடத்திய விசாரணையில், செந்தில் மட்டுமின்றி 15-க்கும் அதிகமானோரிடம் இதே வகையில் நூதன முறையில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

கோவையில் பதுங்கலா?

கடந்த சில தினங்களுக்கு முன் சம்பந்தப்பட்ட பெண்ணின் வங்கி கணக்கு உள்ள கோவை மருதமலை பகுதிக்குச் சென்ற போலீசார் அங்கு அவரது வங்கி கணக்கில் இருந்த முகவரியை தேடி கோவை அருகே உள்ள களப்பநாயக்கன்பாளையம் பகுதிக்கு சென்றனர்.

சம்பந்தப்பட்ட முகவரியில் குடியிருந்த அந்த மோசடி பெண் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து சென்று விட்டதாக வீட்டின் உரிமையாளர் கூறிஉள்ளார். இருப்பினும் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து கோவை பகுதியில் முகாமிட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்