காட்டில் வளரும் களைச்செடியிலும் காசு பார்க்கலாம்...!

காட்டு வளரும் களைச்செடியிலும் காசு பார்க்கலாம்...! என்பதை நிரூபிக்கும் வகையில் வீட்டு உபயோக பொருட்கள் தயாரித்து மலைவாழ் மக்கள் அசத்துகின்றனர்.;

Update:2022-06-19 19:48 IST

பொள்ளாச்சி

காட்டு வளரும் களைச்செடியிலும் காசு பார்க்கலாம்...! என்பதை நிரூபிக்கும் வகையில் வீட்டு உபயோக பொருட்கள் தயாரித்து மலைவாழ் மக்கள் அசத்துகின்றனர்.

உண்ணி செடி

வனத்தில் வளரும் உண்ணி செடிகளால்(களை செடி) எந்த பயனும் இல்லை. இதனால் வனவிலங்குகளுக்கான பசுந்தீவனம் அழிந்து வருகிறது. இதை அழிக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர். இந்த நிலையில் அந்த களை செடியிலும் காசு பார்க்கும் வகையில் ஆனைமலை புலிகள் வால்பாறை வனச்சரகத்தில் கீழ்பூனாட்சி என்கிற மலைக்கிராமத்தில் மலைவாழ் மக்கள் வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து வருகின்றனர்.

இதற்காக அங்கு உள்ள உச்சி மகாளியம்மன் கோவில் வளாகத்தில் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு காட்டில் வளர்ந்து கிடக்கும் உண்ணி செடிகளை வெட்டி கொண்டு வருகின்றனர். பின்னர் அதன் இலைகளை வெட்டி அகற்றி விட்டு, தோல் உரித்து வேக வைக்கின்றனர். பின்னர் குச்சியாக மாற்றி எந்த பொருட்கள் தயாரிக்கிறமோ அதற்கு ஏற்ப அந்த குச்சியை வளைத்து தயாரிக்கின்றனர். தற்போது பல்வேறு வீட்டு பொருட்களை தயாரித்து, அவைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

வேலைவாய்ப்பு

இதற்கு முன் காட்டு வேலைக்கு தான் சென்று வந்தோம். அப்போது யானை தொந்தரவு அதிகமாக இருக்கும். மேலும் சில பூச்சிகள் கடித்தால் ஒரு மாதத்திற்கு அரிப்பு மாறாது. அந்த அளவுக்கு கஷ்டப்பட்டோம். தற்போது வனத்துறையினர். நல்ல வேலைவாய்பை உருவாக்கி வந்து உள்ளனர். நாங்கள் காட்டிற்குள் வசித்தாலும் இந்த உண்ணி குச்சியை விறகிற்கு பயன்படுத்தி வந்தோம். ஆனால் இந்த குச்சியில் இவ்வளவு பயன் இருக்கிறது என்பது தெரியாமல் இருந்தது.

காட்டு வேலைக்கு செல்லும் போது காலை 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். இரவு 10 மணிக்கு தான் வீட்டிற்கு வருவோம். இந்த ஆர்வமுடன் பயிற்சி பெற்றதால் உண்ணி குச்சியில் இருந்து வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்க கற்றுக்கொண்டோம். இதற்கு கர்நாடகாவில் இருந்து பயிற்சி கொடுக்க ஒருவர் வந்து உள்ளார். தற்போது 25 நாட்கள் பயிற்சி கொடுத்து உள்ளனர். மேஜை, நாற்காலி, கூடை, தத்ரூபமாக யானை, மீன் போன்ற பொருட்கள் தயாரிக்க கற்றுக்கொண்டோம். இந்த வேலை நல்ல வருமானத்தை நம்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பொருட்கள் விற்பனைக்கு ஏற்பாடு

ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் கூறியதாவது:-

மலைவாழ் மக்களுக்கு சுயதொழில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். டாப்சிலிப்பில் கால் மிதி தயாரிக்க பயிற்சி கொடுத்து வருகின்றோம். சர்க்கார்பதியில் நெசவு தொழில் குறித்த பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதேபோன்று வனப்பகுதியில் வளரும் உண்ணி செடிகளால் எந்த பயனும் இல்லை.

இதை வெட்டி அகற்றி வருகின்றோம். தற்போது உண்ணி செடிகளில் இருந்து வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பது குறித்து கீழ்பூனாட்சியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு பயிற்சி கொடுத்தாம். இதையடுத்து ஆர்வமுடன் பொருட்கள் தயாரிக்க தொடங்கினர்.

தற்போது யானை, மேஜை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து, அதற்கு இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர். மலைவாழ் மக்கள் தயாரித்த பொருட்களை தங்கும் விடுதிகளுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளோம். மேலும் தேவைபட்டால் ஆழியாறு, அட்டகட்டி போன்ற இடங்களில் கடைகள் வைத்து கொடுக்கவும் தயாராக உள்ளோம். மலைவாழ் மக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வலுவாக இருக்கும்

பயிற்சியாளர் கிருஷ்ணன் கூறுகையில், உண்ணி செடிகளை வெட்டி வந்து இலைகளை வெட்டி விட்டு தோல் உரித்து வேக வைக்க வேண்டும். பின்னர் அந்த குச்சியை கொண்டு பொருட்கள் தயாரிக்கலாம். தேக்கு மரத்தை போன்று வலுவாக உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கதவு, மேஜை, புத்தக அலமாரி, பீப்பாய், ஷோபா, கட்டில் போன்ற வீட்டிற்கு தேவையான பொருட்களை தயாரிக்க முடியும். 45 நாட்கள் ஆர்வமுடன் பயிற்சி பெற்றால் பொருட்களை எளிதில் தயாரிக்க முடியும். இதற்கு மக்களிடையே போதிய வரவேற்பு உள்ளது. மழையில் நனையாமல் பார்த்து கொள்ள வேண்டும். மழையில் நனைந்தால் வலு குறைந்து விடும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்