ராக்கா மாகாணத்தில் மேலும் சில எண்ணெய் கிணறுகளை சிரியப்படைகள் கைப்பற்றின

சிரியாவின் ராணுவம் ஈரானின் ஆதரவு பெற்ற போராளிகளின் உதவியுடன் மேலும் சில எண்ணெய் கிணறுகளை ராக்கா மாகாணத்தில் கைப்பற்றியுள்ளது.

Update: 2017-07-17 22:27 GMT
பெய்ரூட்

சிரியாவின் அரசு ஊடகத்தில் இத்தகவலை ராணுவம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கைப்பற்றிய அல் தாய்லா எண்ணெய் வயல்களுடன், சாம்லா எரிவாயு வயலையும் தோற்று பின் வாங்கும் ஐஎஸ் படையினரிடம் இருந்து சிரியப்படைகள் கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளது.

ராக்கா மாகாணத்தின் தென் மேற்குப் பகுதியிலுள்ள பல எண்ணெய் கிணறுகளை ராணுவம் கைப்பற்றியதாக அவர்கள் தெரிவித்தனர். இதே போல அமெரிக்காவின் ஆதரவு பெற்ற படையினர் ராக்கா நகரத்தின் உள்ளே ஐ எஸ் படையினரை எதிர்த்து போரிட்டு வருகின்றனர்.  சிரியாவின் பெரும்பாலான எண்ணெய் கிணறுகள் குர்திஷ் படையினர் வசமிருக்கும் ஹசாகா எனும் வடகிழக்கு மாகாணத்தில் இருக்கின்றன. 

ரஷ்ய விமானங்களும் சிரியப்படைகளுக்கு ஆதரவாக குண்டுகளை வீசி வருகின்றன. ராக்கா நகரம் வீழ்ந்தால் ஐஎஸ் படையினர் அடுத்ததாக நகரக்கூடிய தியர் அல்-ஸோர் எனும் பகுதிக்கு அருகாமையிலுள்ள சுக்னா எனும் இடத்தில் தற்போது ராணுவம் முன்னேறி வருகிறது.

தியர் அல்-ஸோர் ஈராக்கின் எல்லையோரம் அமைந்துள்ளது. சென்ற வாரம் வரலாற்று நகரமான சுக்னாவின் வட கிழக்கில் அமைந்துள்ள ஹயில் எரிவாயு வயலை ராணுவம் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்