ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 16 போலீசார் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 16 போலீசார் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2017-07-22 06:59 GMT


காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலிபான், அல்-கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் அவர்களை ஒடுக்கும் பணியில் அந்நாட்டு பாதுகாப்பு படை இறங்கி உள்ளது. ஆப்கானிஸ்தான் படைகளுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான வெளிநாட்டு படைகளும் போராடி வருகிறது. அமெரிக்கா வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது, இதில் துரதிஷ்டவசமாக ஆப்கானிஸ்தான் படைகளும் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

நேற்று மாலை ஹெல்மண்ட் மாகாணத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் அந்நாட்டு போலீசார் சிக்கிக் கொண்டனர். இதில் கமாண்டர்கள் உள்பட 16 பேர் பலியாகினர் என ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் கூறிஉள்ளனர். தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததை அமெரிக்காவின் பெண்டகனும் உறுதி செய்து உள்ளது. சண்டையின் போது 22 போலீசாரை காணவில்லை, அவர்கள் கடத்தப்பட்டார்களா என்பது குறித்தும் தகவல்கள் தெளிவாகவில்லை.

மேலும் செய்திகள்