“என்னுடைய தேசத்தை விட்டுவிடுங்கள்” -ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு சிறிசேனா கோரிக்கை

“என்னுடைய தேசத்தை விட்டுவிடுங்கள்” என்று ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு சிறிசேனா கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-05-01 09:44 GMT
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் உலகை உலுக்கியது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெளிநாட்டு பயங்கரவாதிகள் உதவியுடன் உள்நாட்டு கடும் போக்காளர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என இலங்கை அரசு தெரிவித்தது. இதில் தமிழில் பேசும் பயங்கரவாதி ஜக்ரான் ஹாசிம்தான் மூளையாக செயல்பட்டுள்ளான் என தெரிகிறது. சர்வதேச தொடர்பு பற்றி இலங்கை விசாரிக்கிறது.

இதற்கிடையே ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இத்தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுள்ளது. இலங்கை போன்ற சிறிய நாடுகளை தன்னுடைய இலக்காக ஐ.எஸ். பயங்கரவாதம் நிர்ணயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்நிலையில் “என்னுடைய தேசத்தை விட்டுவிடுங்கள்,” என்று ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு சிறிசேனா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்கை நியூசுக்கு பேட்டியளித்த சிறிசேனா,  ஈஸ்டர் தின தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாதி மூளையாக செயல்பட்டு இருக்கலாம். பயங்கரவாத குழு என்னுடைய தேசத்தை விட்டு விடவேண்டும்,” என கோரிக்கை விடுக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையே பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என பாதுகாப்பு படைகள் அனைத்தும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என அரசுதரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ரமலான் மாதம் மே 6-ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இத்தாக்குதல் முன்னெடுக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு சென்றுள்ள சிறிய அளவிலான குழு பயங்கரவாத குழுவிடம் பயிற்சி பெற்றுள்ளது எனவும் சிறிசேனா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்