அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நீல் கோர்சச் நியமனம் டிரம்ப் முடிவுக்கு செனட் சபையின் ஒப்புதல் கிடைக்குமா?

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நீல் கோர்சச் நியமிக்கப்பட்டுள்ளார்.;

Update:2017-02-02 03:45 IST
வாஷிங்டன்,

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நீல் கோர்சச் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி டிரம்பின் இந்த முடிவுக்கு, செனட் சபையின் ஒப்புதல் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவி காலி

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்து வந்த ஆன்டனின் ஸ்கேலியா, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி திடீரென மரணம் அடைந்தார்.

அதனால் ஏற்பட்ட காலி இடத்துக்கு தமிழரான ஸ்ரீகாந்த் சீனிவாசன் (வயது 48), அமெரிக்காவின் மெர்ரிக் கார்லண்ட் (63), கேட்டன்ஜி பிரவுன் ஜாக்சன் (45) ஆகிய 3 பேரது பெயர்கள் இறுதிக்கட்ட பரிசீலனையில் இருந்தது. கடைசியில், மெர்ரிக் கார்லண்டை அப்போதைய ஜனாதிபதி ஒபாமா சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 16-ந் தேதி நியமனம் செய்தார். அப்போது குடியரசு கட்சியில் அதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

ஆனால் மெர்ரிக் கார்லண்ட் நியமனத்துக்கு பாராளுமன்ற செனட் சபையின் ஒப்புதலை பெற முடியாமல் இழுபறி ஏற்பட்டது. கடைசியில் அவரது நியமனம் கடந்த மாதம் 3-ந் தேதி காலாவதியானது.

நீல் கோர்சச் நியமனம்

இந்த நிலையில் ஆன்டனின் ஸ்கேலியா இடத்தில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நீல் கோர்சச்சை (49) ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் நியமனம் செய்தார். இதற்கான அறிவிப்பை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களை சந்தித்தபோது டிரம்ப் வெளியிட்டார்.

நீல் கோர்சச், கொலராடோ மாகாணத்தில் அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி வந்தார்.

நீல் கோர்சச்சை நியமனம் செய்து ஜனாதிபதி டிரம்ப் கூறும்போது, “நீதிபதி கோர்சச் அறிவாளி. ஈடு இணையற்ற சட்டக்கல்வி பயின்றவர். மிகச் சிறந்த சட்ட ஆற்றல் பெற்றவர். அபாரமான ஒழுக்கம் உடையவர். இரு கட்சி ஆதரவையும் பெற்றவர்” என புகழாரம் சூட்டினார்.

கவுரவம் என கருத்து

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பதை நீதிபதி நீல் கோர்சச் ஏற்றுக்கொண்டார். இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “நான் கவுரவிக்கப்பட்டுள்ளேன். நான் தாழ்மையுடன் இந்த பதவியை ஏற்றுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இறுதிக்கட்ட பரிசீலனையில் 21 பேரது பெயர்கள் இடம்பெற்றிருந்ததாகவும், அவர்களில் நீல் கோர்சச்சுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 25 ஆண்டுகளில் வயதில் இத்தனை இளைய ஒருவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

செனட் ஒப்புதல் கிடைக்குமா?

அதே நேரத்தில் இவரது நியமனத்தில் பாராளுமன்ற செனட் சபையின் ஜனநாயக கட்சி தலைவர் சக் ஸ்கூமர் சந்தேகத்தை எழுப்பி உள்ளார். “அவரது ஆவணங்களை பார்க்கிறபோது, நீதிபதி நீல் கோர்சச்சின் திறமை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆவதற்கான தரத்தில் இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது” என கூறினார்.

நீதிபதி நீல் கோர்சச்சை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக டிரம்ப் நியமனம் செய்திருந்தாலும், அதற்கு பாராளுமன்ற செனட் சபையில் ஒப்புதல் பெற வேண்டும், அந்த ஒப்புதல் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

மேலும் செய்திகள்