அமெரிக்காவில் தாக்குதல்களை முறியடிக்க பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு துப்பாக்கி?

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பார்க்லேண்ட் மெர்ஜாரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப்பள்ளியில் கடந்த 14–ந் தேதி, அதன் முன்னாள் மாணவர் நிக்கோலஸ் குரூஸ் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

Update: 2018-02-22 22:45 GMT

வாஷிங்டன்,

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில், அந்தப் பள்ளிக்கூட மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மத்தியில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் பேசினார். அப்போது அவர்கள் அனைவரும், துப்பாக்கி வாங்குதல் தொடர்பான கொள்கைகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.

பள்ளிக்கூட துப்பாக்கிச்சூட்டில் தன் மகளை இழந்த போலாக் என்பவர், ‘‘நாம் நமது மகள்களைப் பாதுகாக்க தவறி விட்டோம். இது இனி ஒருமுறை நேரக்கூடாது’’ என கூறினார்.

அவர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், ‘‘ஆசிரியர்கள் கைகளில் துப்பாக்கி இருந்தால், புளோரிடாவில் 17 பேரை பலி கொண்டது போன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களை முறியடித்து விட முடியும்’’ என கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, ‘‘இனி துப்பாக்கி வாங்குகிறவர்களின் பின்னணி தீவிரமாக ஆராயப்படும். அவர்களின் மனநலமும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்’’ எனவும் கூறினார்.

மேலும், 2016–ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது தான் வகுப்பு அறைகளில் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு ஆதரவாக இருந்ததாக கூறப்படுவதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார்.

ஒரு மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது, ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்கலாம் என்ற டிரம்பின் யோசனைக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்