நியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூடு பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

நியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2019-03-15 05:37 GMT
கிறிஸ்ட்சர்ச்,

நியூசிலாந்து நாட்டின்  முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல் நூர்  மசூதியில் அடையாளம் தெரியாத நபர்  துப்பாக்கிச்சூடு நடத்தியதாக  தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் போலீசார் மசூதியை சுற்றி வளைத்து பதிலடி கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில்  முதல் கட்டமாக 6 பேர் பலியானதாக  தகவல் வந்தது. தற்போது பலியானவர்கள் எண்ணிக்கை 30  ஆக உயர்ந்து உள்ளது. 

போலீசாருக்கும் துப்பாக்கி ஏந்திய நபர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மத்திய கிறிஸ்ட்சர்ச் பகுதி வாசிகள், வீதிகளுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் சந்தேகத்துக்குரிய நடமாட்டங்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கிறிஸ்ட்சர்ச் போலீசார் தெரிவித்துள்ளனர். 

துப்பாக்கிச்சூடு தொடர்பாக 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். வேறு யாரேனும் உள்ளார்களா? என போலீசார் தேடி வருகின்றனர். 

இது போல்  இரண்டாவது துப்பாக்கிச்சூடு லின்வுட் புறநகர் பகுதியின் மசூதியில் நடந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இது போல் நகரில்  பலவேறு இடங்களில் வெடிகுண்டுகள் நிரப்பிய கார்களை போலீசார் கண்டறிந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு நடைபெற்ற ஹாக்லே பார்க் பகுதியில் உள்ள மசூதிக்கு வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள்  சென்று இருந்ததாகவும்  எனினும் பத்திரமாக திரும்பியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. வங்காளதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பாலும் இந்த தகவலை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மிகவும் அபாயகரமான அனுபவமாக இருந்ததாக தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்