அல்ஜீரியாவில் பயங்கரம்: இசை கச்சேரியில் கூட்ட நெரிசல்; 5 பேர் உயிரிழப்பு

அல்ஜீரியாவில் இசை கச்சேரி ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-08-23 22:15 GMT
அல்ஜியர்ஸ்,

அல்ஜீரியா நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற ‘ராப்’ பாடகர் அப்டெர்ரூப் டெராட்ஜி. ‘சூல்கிங்’ என்ற செல்லப்பெயரில் அழைக்கப்படும் இவரது இசைக்கு அந்நாட்டில் ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு.

இந்த நிலையில், அந்நாட்டின் தலைநகர் அல்ஜியர்சில் உள்ள மைதானம் ஒன்றில், அப்டெர்ரூப் டெராட்ஜியின் இசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரது இசையை கேட்டு ரசிக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் ரசிகர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் ஒரு பகுதியினர் மைதானத்தை விட்டு வெளியேற முற்பட்டனர். அப்போது மைதானத்தின் ஒரு நுழைவாயிலுக்கு அருகே கடும் நெரிசல் ஏற்பட்டது.

ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு வெளியேற முற்பட்டதில் சிலர் கீழே விழுந்து கூட்டத்தினரின் கால்களில் மிதிப்பட்டனர். மேலும் சிலர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இப்படி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஆனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், படுகாயம் அடைந்த 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே, இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தபோதும், இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படாமல் திட்டமிட்டபடி நடந்ததாகவும், அது உள்ளூர் தொலைக் காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்