நைஜீரிய போர் விமானங்கள் வான்தாக்குதல்‘போகோஹரம்’ கட்டளை மையம் அழிப்பு-பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

நைஜீரியாவில் போர் விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் போகோஹரம் பயங்கரவாதிகளின் கட்டளை மையம் அழிக்கப்பட்டது. அங்கிருந்த பயங்கரவாதிகள் அனைவரும் கொன்று குவிக்கப்பட்டனர்.

Update: 2020-06-20 23:30 GMT
அபுஜா,

நைஜீரியாவில் போர் விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் போகோஹரம் பயங்கரவாதிகளின் கட்டளை மையம் அழிக்கப்பட்டது. அங்கிருந்த பயங்கரவாதிகள் அனைவரும் கொன்று குவிக்கப்பட்டனர்.

நைஜீரியா நாட்டில் போகோஹரம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மேற்கத்திய கல்வி முறையே ஒரு பாவச்செயல் என்று கருதும், இவர்கள் அங்கு மத அடிப்படையிலான ஆட்சியை ஏற்படுத்தி, ஷரியத் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆயுதப்போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கல்வி நிறுவனங்களில் மாணவ மாணவிகளை கடத்துவது, கிராமங்களில் புகுந்து மக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி கொல்வது, கால்நடைகளை கொள்ளையடிப்பது போன்ற கொடூரச் செயல்களில் இவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவது நைஜீரிய அரசுக்கு பெருத்த தலைவலியை தந்து வருகிறது.

இந்த நிலையில் அந்த நாட்டின் வடகிழக்கு பகுதியில் போகோஹரம் பயங்கரவாதிகளின் கட்டளை மையம் ஒன்று செயல்பட்டு வருவது, நைஜீரிய அரசுக்கு தெரிய வந்தது.

போர்னா மாகாணத்தில் சம்பீசா வன பகுதியில் அடங்கியுள்ள யுவே என்ற இடத்தில் இந்த மையம் செயல்பட்டு வருவது குறித்து உளவு தகவல்களும் கிடைத்தன. இதையடுத்து அங்கு வான்தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நைஜீரிய ராணுவம் போர் விமானங்களை கொண்டு அந்த வன பகுதியை முற்றுகையிட்டு கடுமையான வான்தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதல்களில் போகோஹரம் பயங்கரவாதிகளின் கட்டளை மையம் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தில் கூடி இருந்த பயங்கரவாகிகள் அனைவரும் கூண்டோடு கொல்லப்பட்டு விட்டனர்.இது அந்த பயங்கரவாத அமைப்புக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதை நைஜீரிய ராணுவ செய்தி தொடர்பாளர் ஜான் எனென்ச் உறுதி செய்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- போகோ ஹரம் பயங்கரவாதிகளின் கட்டளை மையம், யுவே என்ற இடத்தில் காட்டுப்பகுதியில் செயல்படுவது குறித்து தகவல்கள் கிடைக்கப்பெற்றோம். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியை எங்கள் போர் விமானங்கள் சூழ்ந்து கொண்டு இடைவிடாது வான்தாக்குதல்கள் நடத்தின. இதில் அந்த கட்டளை மையம் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. அங்கிருந்த பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டு விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

அதே நேரத்தில் இந்த வான்தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிய வில்லை.சம்பீசா காட்டுப்பகுதியில்தான் போகோஹரம் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம் செயல்பட்டு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்