அமெரிக்காவில் போராட்டகளத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

அமெரிக்காவில் போராட்ட களத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகினர்.

Update: 2020-06-21 21:37 GMT

நியூயார்க்,

அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணம் மின்னபொலிஸ் நகரில், கடந்த 25ந் தேதி, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார். இதில், ஜார்ஜ் பிளாய்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதையடுத்து, போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நிறம் மற்றும் இனவெறிக்கு எதிராகவும் , அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

இந்த போராட்டங்களின் போது பெருமளவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.பெரும்பாலான நகரங்களில் போராட்டங்கள் தணிந்து அமைதி திரும்பியிருந்தாலும் மின்னபொலிஸ் உள்ளிட்ட சில நகரங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக மின்னபொலிஸ் நகரத்தில் மக்கள் ஆங்காங்கே குடில்கள் அமைத்து அங்கேயே தங்கியிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் நேற்று அதிகாலை மின்னபொலிஸ் போராட்டக்காரர்கள் மண்டலமாக விளங்கும் பகுதியில் திடீர் துப்பாக்கிச்சூடு நடந்தது.மர்ம நபர் ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் 19 வயதான வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த நபர் களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தாக்குதல் நடத்திய நபர் யார்? தாக்குதலுக்கான பின்னணி என்ன? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்