இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் அமைதி ஒப்பந்தம் வெள்ளை மாளிகையில் கையெழுத்தாகிறது

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான அமைதி ஒப்பந்தம் வருகிற 18-ந் தேதி அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2020-09-03 00:21 GMT
வாஷிங்டன்,

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே முழு அளவிலான உறவை மேற்கொள்ளும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் அமெரிக்காவின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 13-ந் தேதி கையெழுத்தானது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே நடந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், 3-வது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி தொலைத்தொடர்பு, வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேறி வருகின்றன.

இந்த நிலையில் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான அமைதி ஒப்பந்தம் வருகிற 18-ந் தேதி அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான உறவை இயல்பாக்குவது தொடர்பாக அமெரிக்காவுடன் சேர்ந்து நடைபெறும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது.

தூதரக அலுவலகங்களை அமைப்பது, தூதரக அதிகாரிகளை நியமிப்பது மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்