உலகமே கொரோனாவிடம் போராடும் நிலையில் சீனாவின் உகான் நகரில் இயல்பு நிலை திரும்பியது

உலகமே கொரோனாவிடம் போராடி வரும் நிலையில், சீனாவின் உகான் நகரிலோ இயல்பு நிலை திரும்பி விட்டது.

Update: 2021-01-23 21:59 GMT
பீஜிங், 

உலக நாடுகள் அனைத்தையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா வைரசின் பிறப்பிடம், சீனாவின் உகான் நகராகும். அங்குள்ள சந்தைகளில்தான் கடந்த 2019-ம் ஆண்டு இறுதிவாக்கில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.

அங்கிருந்து பரவிய இந்த வைரஸ் ஒட்டுமொத்த உலகிலும் தனது இருப்பை வலுவாக பதிவு செய்தது. வைரஸ் தோன்றி ஏறக்குறைய ஓராண்டுக்கு மேல் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வராததால் கொத்துக்கொத்தாக மக்களை தன் வயப்படுத்தியது, இந்த கொடிய கொரோனா.

அப்படி தற்போதுவரை 9.8 கோடிக்கு அதிகமான பாதிப்புகள், அவற்றில் 20 லட்சத்துக்கு அதிகமான மரணங்கள் என உலகை பாதித்த மிகக்கொடிய வைரசாக, கொரோனா மாறியிருக்கிறது. இந்த வைரசிடம் இருந்து தப்புவதற்கு பொது முடக்கமே ஒரே தீர்வாக தெரிந்ததால், பெரும்பாலான உலக நாடுகள் அனைத்தும் பொது முடக்கத்தை அமல்படுத்தின. உகான் நகர் மட்டுமின்றி சீன மாகாணங்களிலும் இந்த பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால் மக்களின் வாழ்வாதாரமும், நாடுகளின் பொருளாதாரமும் அடங்கிப்போயின. வைரசிடம் இருந்து தப்பித்த ஏழைகள் பட்டினியால் இறக்கும் அவலங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. கொரோனா தடுப்பூசிகள் தற்போதுதான் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டுக்கு வரத்தொடங்கி இருக்கின்றன. எனவே கொரோனாவின் கோரத்தாண்டவம் இனிமேல்தான் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.


இப்படி ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவிடம் போராடி வரும் நிலையில், வைரசின் பிறப்பிடமான உகான் நகரம் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. சுமார் 11 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரில் மக்கள் அதிகாலையிலேயே நடைபயிற்சி, தாய்சி பயிற்சி போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வைரஸ் தாக்குதல் உச்சத்தில் இருந்த நாட்களில் இங்கு அண்டை வீட்டினரை கூட பார்க்க மக்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது கடை வீதிகளில் எல்லாம் வழக்கமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது. உகான் நகர சாலைகளில் வழக்கமான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
சீனாவில் தற்போதும் கொரோனா தொற்று இருக்கிறது. நேற்றும் 107 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டு இருந்தது. எனினும் ஒட்டுமொத்த உலகுக்கும் கொரோனாவை வழங்கிய சீனாவின் உகான் நகரம் தற்போது பெரும்பாலும் இயல்பு நிலையை அடைந்திருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் திரும்பி விட்டது.

மேலும் செய்திகள்