மியான்மர் ராணுவத்தால் சுடப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு; அமெரிக்கா கடும் கண்டனம்

போராட்டக்காரர்கள் மீது மியான்மர் ராணுவம் நடத்தும் தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2021-02-20 00:52 GMT
வாஷிங்டன்,

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தேர்தல் முறைகேடு தொடர்பாக மியான்மர் அரசு தலைவர் ஆங் சான் சூகியை உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்த மியான்மர் இராணுவம் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்தது.

அதனை எதிர்த்து கோடிக்கணக்கான மியான்மர் மக்கள் தொடர்ந்து இரண்டு வாரங்களாக பல வெவ்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவ ஆட்சியை இடைவிடாமல் எதிர்த்து, தலைவர் ஆங் சான் சூகியை விடுவிக்க முயன்று வருகின்றனர். போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து சுமார் 495 பொதுமக்கள் ஆர்வலர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த வாரம் தலைநகர் நேபிடாவில் ராணுவத்துக்கு எதிராக நடத்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர. இந்தத் தாக்குதலில் 20 வயதான மயா த்வாடே கைங் என்ற இளம்பெண் தலையில் சுடப்பட்டு  பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மயா த்வாடே கைங் உயிரிழந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மியான்மரில் ராணுவத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ளது.

இதற்கிடையில் போராட்டக்காரர்கள் மீது மியான்மர் ராணுவம் நடத்தும் தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இது குறித்து பேசிய அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் நெட் ப்ரைஸ், மியான்மர் ராணுவத்தால் சுடப்பட்டு 20 வயது பெண் மயா த்வாடே கைங் உயிரிழந்த சம்பவம் மிகவும் கவலையளிப்பதாகவும், போராட்டக்காரர்கள் மீது மியான்மர் ராணுவம் நடத்தும் தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்