உக்ரைனிலிருந்து இதுவரை 40 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர் - ஐ.நா அகதிகள் ஆணையம்

உக்ரைனிலிருந்து இதுவரை 40 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-03-30 13:15 GMT
கோப்புப் படம் ANI
நியூயார்க்,

கடந்த மாதம் பிப்ரவரி 24-ந்தேதி உக்ரைன் மீது ரஷியா ராணுவ தாக்குதலை தொடங்கியது. தொடர்ந்து 35-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்த நிலையில் இதுவரை உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறி உள்ளவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பின் ஆணையர் பிலிப்போ கிராண்டி கூறியுள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர், "நான் இப்போது உக்ரைனுக்கு வந்திருக்கிறேன். இந்த அர்த்தமற்ற போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவும் வழிகள் குறித்து ஐ.நா மற்றும் எல்விவ் நகரில் உள்ள அதிகாரிகளுடன் விவாதிப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.

உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ள அகதிகளில் சுமார் 23 லட்சம் பேர் போலந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் அண்டை நாடுகளான ருமேனியா, மால்டோவா மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளதாக ஐநா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்