கடவுளின் எதிரி... 2,600 பேருக்கு மரண தண்டனையா? ஈரானில் பதற்றம்

கைது செய்யப்பட்ட அனைவரும் கடவுளின் எதிரிகளாக கருதப்படுவார்கள் என ஆசாத் கூறி வருகிறார்.;

Update:2026-01-11 14:20 IST

தெஹ்ரான்,

ஈரான் நாட்டில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கியது. அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 2 வாரங்களாக நடந்து வரும் போராட்டம் இன்றும் தீவிரமடைந்து உள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

வன்முறையை பரவாமல் தடுக்கும் நோக்கில் என கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்து உள்ளது. இதனால், ஈரானில் நடக்கும் விசயங்கள் வெளியுலகிற்கு சரிவர தெரியாத வகையில் நிலைமை உள்ளது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

எனினும், ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 116 பேர் பலியாகி இருக்க கூடும் என அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.

இந்த சூழலில், ஈரானின் அட்டார்னி ஜெனரல் முகமது மோவாஹிதி ஆசாத் அரசு தொலைக்காட்சியில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள், கலகக்காரர்களுக்கு உதவுபவர்கள் அல்லது வன்முறையில் பொருட்களை சூறையாடுபவர்கள் மற்றும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான, விரைவான, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அந்த குற்றவாளிகள் அனைவருக்கும் ஒரேவித தண்டனைதான் கிடைக்கும். அவர்களுக்கு எந்தவித கருணையும் காட்ட கூடாது என வழக்கறிஞர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

ஈரானுக்கு எதிராக, அந்நிய நாட்டின் ஆதிக்கம் செலுத்த கூடிய, பாதுகாப்பற்ற சூழலை உருவாக்க கூடிய, நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்களை கண்டறிந்து, தாமதமின்றி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்றும் வழக்கறிஞர்களுக்கு கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கு எதிராக செயல்படுவோர், பொது சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள், சூறையாடுபவர்கள், ஈரான் தண்டனை சட்டத்தின் கீழ் கடவுளுக்கு எதிராக போர் செய்பவர்களாக ஆகிறீர்கள். ஈரானில் இதுபோன்ற கொடுங்குற்றங்களுக்கு மரண தண்டனை உள்பட தீவிர தண்டனைகள் விதிக்கப்படும் என எச்சரித்து உள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2,600 பேர் அரசால் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் கடவுளின் எதிரிகளாக கருதப்படுவார்கள். அந்த அடிப்படையில் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என ஆசாத் கூறி வருகிறார்.

இஸ்லாமிய நாடான ஈரானின் சட்டப்படி இந்த குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்படும். அதனால், ஈரானில் அரசுக்கு எதிரான தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 2,600 பேரின் நிலை என்ன? என தெரியாமல் பதற்றம் காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்