வங்காளதேசம்: ஷரியத்பூரில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி 2 பேர் பலி
குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.;
ஷரியத்பூர் [பங்களாதேஷ்],
வங்காள தேசத்தின் ஷரியத்பூர் மாவட்டத்தின் ஜாஜிரா உபசிலாவில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த 22 வயதான முகமது நபின் ஹொசைன், டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (டிஎம்சிஎச்) சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த மற்றொருவரான 25 வயதான அர்மான் நயன் மொல்லா, இன்னும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட தகவல்படி, வியாழக்கிழமை அதிகாலையில் பிலாஷ்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பேபாரிகண்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த வெடிப்பில் அந்த கட்டிடம் முற்றிலுமாக சேதமடைந்து, அதன் கூரை தூக்கி எறியப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திலிருந்து குண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்களை காவல்துறை மீட்டெடுத்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மற்றொரு நிகழ்வில், குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து 32 வயதான சோஹன் பேபாரியின் சிதைந்த உடலை காவல்துறை மீட்டது. அந்த உடல் அங்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை தொடரும் நிலையில், ஜஜிரா காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி சலே அகமது கூறுகையில், “முதற்கட்டமாக, குண்டுகள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக நாங்கள் நம்புகிறோம். உயிரிழப்புகள் மற்றும் காயங்களுக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை ஆராய்ந்து வருகிறோம்” என்று கூறினார்.