மூன்றாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் நேபாள பிரதமர்

பிரசந்தா பிரதமர் ஆன பிறகு நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் மூன்றாவது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-03-13 12:55 GMT

காத்மாண்டு,

நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற முடியாமல் போனது. இதனால், சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

அதன்பிறகு கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றதையடுத்து, நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் நீடித்தார் பிரசந்தா.

இதையடுத்து நேபாளத்தில் மீண்டும் கூட்டணி மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேபாள காங்கிரசுடனான கூட்டணியை முறித்த பிரசந்தா, மீண்டும் சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.

அரசியலமைப்பு விதிகளின்படி, எந்தவொரு கூட்டணி கட்சியும் அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்ற பிறகு, 30 நாட்களுக்குள் பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். எனவே, மார்ச் 13-ம் தேதி நாடாளுமன்றம் கூடும்போது, பிரதமர் பிரசந்தா நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டிருந்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்டாயம் அவையில் இருக்க வேண்டும் என அனைத்து உறுப்பினர்களுக்கும் கொறடா உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, நேபாள நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 268 வாக்குகளில் பிரசந்தாவுக்கு ஆதரவாக 157 வாக்குகளும், அவருக்கு எதிராக 110 வாக்குகளும் பதிவாகின. மேலும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு உறுப்பினர் வாக்களிக்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசந்தா வெற்றி பெற்றுள்ளார். பிரசந்தா பிரதமர் ஆன பிறகு நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் மூன்றாவது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்