பாலஸ்தீன அரசுக்கு அங்கீகாரம்; நார்வே, அயர்லாந்தில் இருந்து தூதர்களை திரும்ப பெற்ற இஸ்ரேல்

பாலஸ்தீன அரசுக்கு அங்கீகாரம் வழங்குவதாக கூறிய நார்வே மற்றும் அயர்லாந்தில் இருந்து தங்கள் நாட்டின் தூதர்களை திரும்ப பெறுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

Update: 2024-05-22 09:11 GMT

Image Courtesy : AFP

ஜெருசலேம்,

இஸ்ரேல்-காசா போர் கடந்த 7 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதே ஒரே தீர்வாக அமையும் என பல்வேறு ஐரோப்பிய நாடுகள் கூறி வருகின்றன.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லாத நார்வே அரசாங்கம், வரும் 28-ந்தேதி பாலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் கூறுகையில், "பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிக்காவிட்டால் மத்திய கிழக்கில் அமைதி ஏற்படாது. தனி நாடாக செயல்படுவதற்கான உரிமை பாலஸ்தீனத்துக்கு உள்ளது" என்று தெரிவித்தார்.

அதே போல் அயர்லாந்து அரசாங்கமும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நார்வே மற்றும் அயர்லாந்தில் இருந்து தங்கள் நாட்டின் தூதர்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி காட்ஸ் கூறுகையில், "பயங்கரவாதத்திற்கு பலன் இருக்கிறது என்ற செய்தியை அயர்லாந்து மற்றும் நார்வே அரசுகள் இந்த உலகிற்கு சொல்ல வருகின்றன. பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்குவது, காசாவில் அடைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலின் பணயக்கைதிகளை மீட்கும் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கக்கூடும். ஸ்பெயின் அரசாங்கமும் இதே முடிவை எடுக்குமானால், ஸ்பெயின் நாட்டிற்கான இஸ்ரேலின் தூதரையும் திரும்ப பெறுவோம்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்