அமானுஷ்ய ஆன்மிகம் : வூடூ டாக்டர் பஸ்ஸார்ட்

கருப்புப் பூனையின் உடல் எலும்புகளில் வூடூ சக்தி பெற்ற எலும்பு எது, அந்த எலும்பைப் பெறுவது எப்படி? என்பதில் மட்டும் பொதுவாக வூடூ புத்தகங்களில் குறிப்பிட்டிருப்பதற்கும், டாக்டர் பஸ்ஸார்ட் குறிப்பிட்டிருப்பதற்கும் சிறிய வித்தியாசம் இருக்கிறது.

Update: 2017-05-02 07:31 GMT
மெரிக்காவில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்த வூடூ மனிதர் டாக்டர் பஸ்ஸார்டு (Dr. Buzzard). அவர் இயற்பெயர் ஸ்டீபனி ராபின்சன் என்ற போதும், ஆங்கிலத்தில் ‘பஸ்ஸார்டு’ எனப்படும் ஒருவகை கழுகின் பெயரில் அழைக்கப்பட்டார். தென் கரோலினாவில் ப்யூஃபோர்ட் நகர (Beaufort County) எல்லைக்குட்பட்ட பகுதியில் செயிண்ட் ஹெலெனா தீவு உள்ளது. இந்த தீவில் அவர் வாழ்ந்த காலத்தில் அவரது பெயர் பலருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. சூனியம் வைப்பதிலும், சூனியம் எடுப்பதிலும் வல்லவரான அவரது புகழ், அமெரிக்காவின் மற்ற மாகாணங் களிலும் பரவி இருந்தது.

அவர் பாட்டனாரோ, தகப்பனாரோ ஒரு அடிமையாக ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கா வந்ததாகவும், அவரிடமிருந்து டாக்டர் பஸ்ஸார்ட் வூடூவைக் கற்றுக் கொண்டதாகவும் சிலர் கூறுகிறார்கள். சிலர் அவர் இளைஞனாக இருக்கும் போது அவர் தலையில் ஒரு பறவை வந்து அமர்ந்து விட்டுப் போனதாகவும், அக்கணத்திலிருந்து அவர் வூடூ சக்திகளைப் பெற்ற தாகவும் கூறுகிறார்கள். சூனியம் வைப்பது, எடுப்பது தவிர இறந்த உறவினர்களின் ஆவிகளைத் தொடர்பு கொள்ளவும், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறவும் கூட மக்கள் அவரிடம் அதிக அளவில் வந்தார்கள்.

நேரடியாக வந்தவர்களை விட பலமடங்கு அதிகமாக, அவரைத் தபாலில் அமெரிக்காவின் பல பகுதிகளில் இருந்து தொடர்பு கொண்டார்கள். தபாலிலேயே பணம், செக், மணி ஆர்டர் எல்லாம் அனுப்பினார்கள். எதில் எல்லாம் கையெழுத்து போட வேண்டி வருமோ, அதை எல்லாம் கிழித்து எறிந்து விட்டு மற்றதை மட்டும் டாக்டர் பஸ்ஸார்ட் எடுத்துக் கொண்டார். சூனியம் சட்டப்படி குற்றம் என கருதப்பட்டதே அதற்கு காரணம். கையெழுத்து போட்டு ஒரு சாட்சியம் உண்டாக்கி கைதாக அவர் விரும்பவில்லை.

நல்ல உயரமான அவர் எப்போதும் கருப்பு ஆடைகளையும், ஊதா நிறக் கண்ணாடியையும் அணிந்து கொண்டிருப்பார். ஊதா கண்ணாடி இல்லாமல் அவரைப் பார்ப்பது மிகவும் அபூர்வம். அவர் கண்களை மற்றவர்கள் நேராகப் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகவே, அவர் அந்த ஊதா நிறக் கண்ணாடியை அணிந்து கொள்வதாக பலரும் நினைத்தார்கள்.

நீதிமன்ற வழக்கில் சாதகமாகத் தீர்ப்பு வேண்டுபவர்கள் அவரிடம் பெரிய தொகையைத் தந்து விட்டால், நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கையில் அவர் நீதிமன்றம் செல்வார். அங்கு அமர்ந்து ஏதோ ஒரு வூடூ வேரை மென்று கொண்டே இருப்பார். அந்த நேரத்தில் எதிராளிகள் சரியாக வாதம் புரிய முடியாமல் போகுமென்றும், நீதிபதியும், ஜூரிகளும் அவருடைய வாடிக்கையாளருக்கு எதிராகத் தீர்ப்பு சொல்ல முடியாமல் போகும் என்றும் சொல்கிறார்கள். அல்லது குறைந்த பட்ச தண்டனை மட்டுமே கிடைக்கும் என்கிறார்கள். அதனால் பல நேரங்களில் அவர் நீதிமன்றத்திற்குள் நுழைந்தாலே ஒருவித இறுக்கமான சூழ்நிலை நிலவ ஆரம்பித்தது. சில நேரங்களில் வழக்கு நடக்கும் போது, பெரும்திரளாக பஸ்ஸார்ட் கழுகுகள் நீதிமன்ற வளாகத்தில் வருவதுண்டு. அப்படி வந்தாலும் அது அவருடைய சக்தியால் தான் என்றும், தீர்ப்பு சாதகமாகவே இருக்கும் என்றும் மக்கள் நம்பினார்கள். அது உண்மையாகவே இருந்திருக்கிறது.

தொலைவில் இருந்து பணம் அனுப்பி உதவி கேட்கும் வாடிக்கையாளர்களின், பகுதி நீதிமன்றங்களுக்கு அவரால் செல்ல முடியாதல்லவா? எனவே அவர்களுக்கு அவர் மந்திரித்து மிக மென்மையான ஒரு பொடியை அனுப்பி வைப்பார். அந்தப் பொடியை நீதிமன்ற நாற்காலிகளிலும், மேசைகளிலும் ரகசியமாய் தூவி விட்டால் போதும். அந்த வழக்கில் அவர்களுக்கு ஜெயம் தான். இது குறித்து பல புகார்கள் போனாலும், சரியான ஆதாரம் போலீசாருக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும் சில சமயங்களில் அவரை அழைத்து அவர்கள் விசாரித்ததும் உண்டு.

அப்படி ஒரு விசாரணையில் அவர் அதிகாரிகளிடம், தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும், ஆனால் தன்னிடம் விசேஷ சக்திகள் இருப்பதாகவும் சொன்னார். அவர் தன்னை ஒரு இரும்புப் பெட்டிக்குள் வைத்து சங்கிலிகள் வைத்துப் பூட்டினால், தன் சக்திகளைப் புரிய வைப்பேன் என்றும் அதிகாரிகளிடம் கூறினார்.

அதிகாரிகள் அவரைச் சந்தேகப் பார்வையுடன் பார்த்தனர். ‘அப்படிச் செய்து இந்த ஆள் செத்து விட்டால் அது தேவையில்லாத பிரச்சினை’ என்று அவர்களுக் குத் தோன்றியது. ஆனால் ‘அந்த ஆளே அப்படிச் சொல்கிறாரே!, செத்துத் தொலைந்தால் அந்த ஊருக்கே பெரிய பிரச்சினை தீருமல்லவா?, எல்லோருக்கும் நிம்மதியாக இருக்கும். அதனால் அதை யாரும் பெரிதுபடுத்த மாட்டார்கள்’ என்றும் அதிகாரிகள் எண்ணினர். எனவே அதற்கு அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

சவப்பெட்டி போன்ற பெரிய இரும்புப் பெட்டி கொண்டு வரப்பட்டது. அவரை உள்ளே வைத்துப் பூட்டும் முன் அந்த அதிகாரி கடைசியாக ஒருமுறை டாக்டர் பஸ்ஸார்டிடம் கேட்டார். ‘நிச்சயமாகத் தானே சொல்கிறீர்கள்?. உங்கள் மீது என்னதான் குற்றச்சாட்டுகள் என்னிடம் இருந்தாலும், விசாரணை இல்லாமல் உங்களை சாகடிக்க நான் விரும்பவில்லை’

டாக்டர் பஸ்ஸார்ட் சொன்னார். ‘கவலைப் படாதீர்கள். இப்போது மணி என்ன?’

கடிகாரத்தைப் பார்த்த அதிகாரி ‘பதினொன்று’ என்றார்.

‘நல்லது. மதிய சாப்பாட்டை ஒரு மணிக்கு என் குடும்பத்தோடு நான் உண்டு விடலாம்’ என்ற டாக்டர் பஸ்ஸார்ட், இரும்புப் பெட்டியில் படுத்துக் கொண்டார். என்ன தான் சூனியக்காரனாக இருந்தாலும் பலமாகப் பூட்டப்படும் இரும்புப் பெட்டியில் இருந்து எப்படி தப்பிக்க முடியும்? என்பதை நம்ப அந்த அதிகாரிக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் பெரிய பிரச்சினை ஒன்று ஒழிந்தது என்று எண்ணியவராக அவர் பெட்டியை மூடிப் பூட்டினார். பெரிய இரும்புச் சங்கிலி கொண்டு பெட்டியை பலமுறை சுற்றி, அந்த சங்கிலியின் இருமுனைகளையும் சேர்த்து பெரிய பூட்டை வைத்துப் பூட்டினார். பின்னர் அந்தச் சாவியை தன்னிடமே பத்திரமாக வைத்துக் கொண்டார்.

அவரும் அவருடன் இருந்த மூன்று போலீஸ்காரர்களும், அந்த இரும்புப் பெட்டி இருந்த சிறையையும் பூட்டி விட்டு, சிறைச்சாலைக்கு எதிராக இருந்த ஓட்டலில் சாப்பிடப் போனார்கள். அப்போதும் அவர்கள் பேச்சு டாக்டர் பஸ்ஸார்ட் பற்றியே இருந்தது. ‘இரும்புப் பெட்டியில் பூட்டு, அதைச் சுற்றிய சங்கிலியில் பூட்டு, சிறை அறையில் பூட்டு என்று இத்தனை பூட்டுகளை உடைத்து ஒருவன் தப்பிக்க வழியே இல்லை’ என்று பேசிக் கொண்டனர். நிதானமாகச் சாப்பிட்டு விட்டு வரும் போது ‘அந்த ஆள் உடலெல்லாம் நீலமாகிச் செத்திருப்பார்’ என்று ஒரு போலீஸ்காரர் சொன்னார்.

அவர்கள் சிறிது நேரம் கழித்துச் சென்று அந்த இரும்புப் பெட்டியைத் திறந்த போது, ஒரு கருப்புப் பூனை இரும்புப் பெட்டிக்குள் இருந்து தாவிக் குதித்து ஓடியது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். என்ன ஆனது? எப்படி ஆனது? என்பதை அவர்களால் கடைசி வரை அறிய முடியவில்லை.

இந்த சிறைச்சாலை நிகழ்வு பற்றி, டெர்ரன்ஸ் செப்கே (Terrance Zepke) என்பவர் எழுதிய ‘ Lowcountry Vo odoo: Beginner’s Guide to Tales, Spells and Boo Hags ’ என்ற நூலிலும், நான்சி ரைன் (Nancy Rhy-ne) என்பவர் எழுதிய ‘Tales Of The South Carolina Low Country ’ என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாக்டர் பஸ்ஸார்ட் சூனியம் செய்ய பல வகை வேர்களையும், களிம்பு களையும், விலங்குகளையும், பாம்புகளையும் பயன்படுத்தி வந்தார். என்றாலும் கருப்புப் பூனையின் எலும்பினால் தான், பெரிய பெரிய காரியங் களைச் சாதித்துக் கொண்டார் என்ற கருத்து நிலவுகிறது. கருப்புப் பூனையின் எலும்பு பற்றி நாம் முன்பே குறிப்பிட்டிருக்கிறோம். கருப்புப் பூனையின் உடல் எலும்புகளில் வூடூ சக்தி பெற்ற எலும்பு எது, அந்த எலும்பைப் பெறுவது எப்படி? என்பதில் மட்டும் பொதுவாக வூடூ புத்தகங்களில் குறிப்பிட்டிருப்பதற்கும், டாக்டர் பஸ்ஸார்ட் குறிப்பிட்டிருப்பதற்கும் சிறிய வித்தியாசம் இருக்கிறது. மிருகவதை எதிர்ப்புச் சட்டம் வந்து விட்ட இக்காலமாக இருந்தால் கைதாகி விட்டிருக்கக்கூடிய செயல்கள், இவரைப் போன்றவர்களால் அந்த காலத்தில் கருப்புப் பூனையின் எலும்புக்காகச் செய்யப்பட்டன. அதுகுறித்து பிற்கால பகுத்தறிவாளர்கள் கடுமையாக விமர்சித்தார்கள்.

இப்படி சக்தி வாய்ந்தவராக இருந்த டாக்டர் பஸ்ஸார்டை வீழ்த்தவென்று, ஒரு வூடூ போலீஸ்காரர் வந்தது தான் விதியின் செயல். 

மேலும் செய்திகள்