கிறிஸ்துமஸ் நற்செய்தி... ‘தேசமெங்கும் அன்புநதி பெருகட்டும்'
கிறிஸ்துமஸ் மரங்கள் முதன்முதலில் 16-ம்நூற்றாண்டில் ஜெர்மனியில் பயன்படுத்தப்பட்டன.;
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேதாகமத்தில் பல இடங்களில் தீர்க்கதரிசனமாக கிறிஸ்துவுடைய பிறப்பை பற்றி கூறப்பட்டுள்ளது.
வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில்; “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்” (ஏசாயா 7:14) என்று இயேசு கிறிஸ்துவின் பிறப்பை பற்றி கூறப்பட்டுள்ளது.
இதையே வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டில்; “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்: அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள், இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்" (மத்தேயு 1:23) என்று இயேசுவின் பிறப்பை உறுதிப்படுத்துகிறது.
கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியின் நற்செய்தி, கடவுளாகிய இயேசு நம் ரட்சகராக மாறுவார் என்பதுதான். அதனால்தான் அவருடைய பெயர் இயேசு. ஏனென்றால் அவர் தம் மக்களை அவர்களின் பாவத்திலிருந்து மீட்டெடுப்பார்.
சர்வ வல்லமையுள்ள, அண்ட சராசரத்தையும் படைத்த இயேசு கிறிஸ்து, ஒரு மனிதனாக மாறி, அவர் மூலம் நாம் ரட்சிக்கப்படுவதற்காக நமது உலகத்திற்குள், பரிசுத்த ஆவியானவரால் கன்னி மரியாளின் வயிற்றில் உருவாகி, ஏழ்மையின் வடிவாக பெத்லகேமில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்.
சர்வ வல்லமையுள்ள கடவுள் மனிதனாக உருவெடுத்தார். இயேசு இவ்வுலக வாழ்க்கையை வாழ்ந்து, சிலுவையில் ரத்தம் சிந்தி, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தபோது மனிதனால் இறைவனை சேர முடியாது என்ற தடைகளை உடைத்தார். பாவ மன்னிப்பின் நிச்சயத்தை மனிதர்களுக்கு தந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, நம் பாவத்தால் நாம் இனி கடவுளிடமிருந்து பிரிக்கப்படாமல், அவருடனே நித்திய உறவுக்குள் கொண்டு வரப்படுவதற்காக இவ்வுலகத்தில் பிறந்தார்.
இயேசுவை கர்த்தராக ஏற்றுக்கொண்ட அனைவருக்கும், இவ்வுலக வாழ்வு ஒரு நாள் முடிந்து போனாலும், நித்தியமாக, யுகம், யுகமாக அவருடனே வாழும் பரலோக வாழ்வை உறுதிப்படுத்தினார். இதுவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிறப்பின் கிறிஸ்துமஸ் தின நற்செய்தி ஆகும்.
கிறிஸ்துமஸ் என்றாலே இல்லம் தோறும், நட்சத்திரங்கள் ஜொலிக்கும். ஏனெனில் இயேசு பிறந்ததை முதன்முதலில் கேள்விப்பட்ட சாஸ்திரிகளுக்கு நட்சத்திரங்கள் தான் அவர் பிறந்த இடத்திற்கு வழிகாட்டின.
உலகெங்கும் எல்லா கிறிஸ்தவர்களும் ஒரே நாளில் கிறிஸ்துமஸைக் கொண்டாடுவதில்லை. ரஷியா, உக்ரைன் மற்றும் ருமேனியா போன்ற ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் மற்றும் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் தினமாக ஜனவரி 7-ம் தேதியை கொண்டாடுகிறார்கள்.
'கிறிஸ்துமஸ்' என்ற பெயர் ஆங்கில சொற்றொடரான 'கிறிஸ்டெஸ் மேஸ்ஸி' என்பதில் இருந்து வந்தது. இதன் பொருள் 'கிறிஸ்துமஸ்'. 'எக்ஸ்' என்பது கிரேக்க எழுத்தான 'சி' யைக் குறிக்கிறது.
கிறிஸ்துமஸ் மரங்கள் முதன்முதலில் 16-ம்நூற்றாண்டில் ஜெர்மனியில் பயன்படுத்தப்பட்டன. அங்கு கிறிஸ்துமஸ் நேரத்தில், மக்கள் பிர் மரங்களை பழங்கள் மற்றும் கொட்டைகளால் அலங்கரித்தனர். அவற்றை இனிப்புகள், காகித வடிவங்கள் மற்றும் மெழுகுவர்த்திகளால் அலங்கரித்தனர்.
பெரிய தாடி, இளஞ்சிவப்பு கன்னங்கள் கொண்ட ஜாலியான கிறிஸ்துமஸ் தாத்தா பற்றி குறிப்பிடாமல் கிறிஸ்துமஸைப் பற்றி நாம் பேச முடியாது. ஆனால் அவருக்கு 'சாண்டா கிளாஸ்' என்ற பெயர் எப்படி வந்தது என்று தெரியுமா?
சின்டர்கிளாஸ் என்ற சொல்லில் இருந்து சாண்டா கிளாஸ் என்பது வந்தது. அதாவது நெதர்லாந்தின் மொழியான டச்சு மொழியில் 'செயிண்ட் நிக்கோலஸ்' என்று பொருள். புனித நிக்கோலஸ் 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கிறிஸ்தவ பிஷப் ஆவார். இவர் கருணை மற்றும் தாராள மனப்பான்மைக்கு புகழ் பெற்றவர். பின்னர் அவர் குழந்தைகளின் கொடையாளராக, துறவியாக மாறினார்.
கிறிஸ்துமஸ் காலத்தில் பாடப்படும் 'ஜிங்கிள் பெல்ஸ்' என்ற பாடலில் 'கிறிஸ்துமஸ்' என்ற வார்த்தை இல்லை என்பதை நீங்க எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? ஏனென்றால், அது ஆரம்பத்தில் கிறிஸ்துமஸ் பாடலாக பாடப்படவில்லை. அது ஒரு சந்தோஷப்பாடலாக இருந்தது. 1850-ல், 'ஒன் ஹார்ஸ் ஓபன் ஸ்லீன்' என்று தலைப்பிட்டு, அமெரிக்காவில் நன்றி அறிவிப்பிற்காக இந்த பாடல் எழுதப்பட்டது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிறந்த நாளை கொண்டாடும் அனைவர் உள்ளத்திலும், அமைதி, அன்பு பெருகட்டும், ஒருவரை ஒருவர் அரவணைக்கும், நேசிக்கும் உயர்ந்த குணங்கள் உருவாகட்டும். அனைத்து மனிதர்களையும் நேசிப்போம், தேசமெங்கும் சமாதானம், அன்பு, நதி போல் பெருகிப்பாயட்டும், ஆமேன்.
-டாக்டர் ஒய்.ஆர். மானெக்ஷா, நெல்லை.