ஆன்மிகம்
ராமபிரான் வழிபட்ட ஜெகந்நாதர்

ராமநாதபுரம் அருகே உள்ளது திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோவில். ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையது இந்த ஆலயம்.
 இந்த ஆலயத்தில் ராமர் அவதாரம்  புரிய  அருள்புரிந்த  பெருமாளும், சயன ராமரும்  வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் சேதுக்கரை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தைப் பற்றி சில தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

நரசிம்மர்

பொதுவாக மகாலட்சுமியை மடியில் இருத்தியபடி காட்சி தருவார் நரசிம்ம மூர்த்தி. ஆனால் இங்கு ஸ்ரீதேவி, பூதேவி என இரண்டு தாயாருடன் காட்சி தருகிறார். புராதனமான கோவில்களில் மட்டுமே காணக்கூடிய அமைப்பு இது. நரசிம்மரின் இந்த தரிசனம் விசேஷமானது. தவிர, ஜெகந்நாதர் சன்னிதி கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மர் இருக்கிறார். பக்தர்கள் இவருக்கு சந்தன காப்பிட்டு வழிபாடு செய் கிறார்கள்.

மனைவியுடன் கடலரசன்

ராமர், கடலில் பாலம் கட்ட அனுமதி வேண்டியபோது, முதல் கடல் அரசன் ராமர் முன்பாக தோன்றவில்லை. எனவே, ராமர் கடல் மீது பாணம் எய்ய முயன்றார். இதனால் பயந்துபோன சமுத்திரராஜன், மனைவி சமுத்திர ராணியுடன் தோன்றி ராமபிரானை சரணடைந்தான். இவர்கள் இருவரும் சயனராமர் சன்னிதி முன்மண்டபத்தில் வீற்றிருக்கின்றனர். அருகில் ராமருக்கு உதவிய விபீஷணனும் இருக் கிறார்.

சயன ராமன்

சீதையை மீட்க இலங்கை செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் ராமர். இதற்காக கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதிகேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, தர்ப்பைப்புல்லின் மீது சயனம் கொண்டார். இதன் அடிப்படையில் இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலம் என்ற காரணத்தால், இந்த ஆலயத்தில் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். கருவறை சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்.

சேதுக்கரை

திருப்புல்லாணியில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் சேதுக்கரை உள்ளது. ராமர் இங்கிருந்துதான் இலங்கை செல்ல பாலம் அமைத்தார். சேது என்பதற்கு அணை என்று பொருள். அணை கட்டிய இடத்திலுள்ள கரை என்பதால், 'சேதுக்கரை' என பெயர் பெற்றது. இங்கு ஆஞ்சநேயருக்கு கோவில் இருக்கிறது. இவர், இலங்கையை பார்த்தபடி காட்சி தருகிறார். இங்குள்ள கடல், 'ரத்னாகர தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. சித்திரை, பங்குனி பிரமோற்சவத்தின் போது சுவாமி இங்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார். அமாவாசை நாட்களில் இங்கு பிதுர் தர்ப்பணம் செய் கிறார்கள்.

பாடல் பெற்ற பாலம்

திருமங்கையாழ்வார் தன்னை பெண்ணாகப் பாவித்து, இத்தலத்து பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். தவிர, ஆண்டாள், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் இங்குள்ள சேது பாலம் பற்றி பாடியுள்ளனர். பூரி தலத்தில் உள்ள ஜெகந்நாதரின் சிலையில், பாதி அளவிலேயே இங்குள்ள ஜெகந்நாதர் காட்சி தருகிறார். எனவே இதனை 'தட்சிண ஜெகந்நாதம்' என்று அழைக் கிறார்கள். ஆதிஜெகந்நாதர் (அமர்ந்த கோலம்), சயனராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர் (நின்ற கோலம்), அரசமர பெருமாள், பட்டாபிராமர்  என இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங் களில் தரிசனம் தருகிறார்.

பிள்ளை வரம்

குழந்தை பாக்கியத்திற்காக தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார். யாககுண்டத்தில் இருந்து வெளிப்பட்ட பாயாசத்தை தன் 3 மனைவி களுக்கும் கொடுத்தார். அதை அவர்கள் சாப்பிட்டதும் அவர்களுக்கு ராமர், லட்சுமணர், பரதன், சத்துருகணன் ஆகியோர் பிறந்தனர். இதன் அடிப்படையில், இந்தக் கோவிலில் அதிகாலையில் சேதுக்கரை கடலில் நீராடிவிட்டு, கோவிலுக்கு வந்து நாகர் சிலைக்கு ஒரு நாள் முழுவதும் கணவனும், மனைவியும் உபவாசகம் இருக்க வேண்டும்.

பின்பு அன்றிரவு கோவிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் நாகபிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்ய வேண்டும். யாகம் முடிந்ததும் பிரசாதமாக பால் பாயாசம் தரப்படும். இதனை அருந்தினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

பட்டாபிராமன்

சீதையை மீட்டு ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த ராமர், இங்கு சுவாமியைத் தரிசித்துச் சென்றார். இவர் பட்டாபிராமனாக சீதை, லட்சுமணருடன் கொடி மரத்துடன் கூடிய சன்னிதியில் அருள்பாலிக்கிறார். சித்திரை மாதத்தில் இவருக்கு பிரமோற்சவம் நடக்கிறது. இத்தலம் வந்த ராமர், சீதையை மீட்க அருளும்படி ஜெகந்நாதரிடம் வேண்டினார். சுவாமி அவருக்கு ஒரு பாணம் கொடுத்தார். ராமன், அந்த பாணத்தை பிரயோகித்து ராவணனை அழித்தார்.

இதன் அடிப்படையில் எச்செயலையும் தொடங்கும் முன்பு, இத்தல இறைவன் ஜெகந்நாதரை வேண்டிக்கொண்டால் அது வெற்றி பெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. எனவே அவர் 'வெற்றிபெருமாள்' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.