ஆன்மிகம்
தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தேன்கனிக்கோட்டையில் கனகதாசர் ஜெயந்தி விழாவையொட்டி, தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேன்கனிக்கோட்டை,

கவி கனகதாசர் ஜெயந்தி விழா தேன்கனிக்கோட்டையில் குரும்பர் சங்கம், கனகஜோதி சேவா சமிதி சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு, நேற்று காலையில் கனகதாசர் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி, குரும்பர் சமுதாய மக்கள், தங்கள் குல தெய்வங்களை, தேன்கனிக்கோட்டை வெங்கடப்பா திருமண மண்டபத்தில் இருந்து பஸ் நிலையம் வரை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

அப்போது குரும்பர் சமுதாய மக்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளான, டொல்லு, குணிதா, வீரகாசை உற்சவம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க வந்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக பஸ் நிலைய மைதானத்திற்கு ஊர்வலம் வந்தடைந்தது.

பின்னர் அங்கு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபடும் நேர்த்திக்கடன் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்கள் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக அமர, பூசாரி அவர்களின் தலையில் அடுத்தடுத்து தேங்காய்களை உடைத்தார். பக்திகோஷம் முழங்க நடந்த இந்த வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர்.