மனித நேயம்

திருச்சட்ட அறிஞர் ஒருவர், இயேசு பெருமகனாரைச் சோதிக்கும் பொருட்டு, ‘போதகரே! நிலையான வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள, நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்.

Update: 2017-11-21 02:00 GMT
திருச்சட்ட அறிஞர் ஒருவர், இயேசு பெருமகனாரைச் சோதிக்கும் பொருட்டு, ‘போதகரே! நிலையான வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள, நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்.

அதற்கு இயேசு மறுமொழியாக, ‘திருச்சட்ட நூலில் என்ன எழுதி இருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?’ என்று கேட்டார்.

அதற்கு அந்த அறிஞர், ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனதோடும், உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக! உன் மீது நீ, அன்பு கூர்வது போல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக என்று எழுதியுள்ளது’ என்றார்.

அதற்கு இயேசு பிரான், ‘சரியாகச் சொன்னீர். அப்படியே செய்யும். அப்பொழுது வாழ்வீர்’ என்று கூறினார்.

அறிஞர், தம்மை நேர்மையாளர் என்று காட்ட விரும்பினார். உடனே அடுத்த வினாவைத் தொடுக்கிறார். ‘எனக்கு அடுத்து இருப்பவர் யார்?’ என்ற கேள்வியைக் கேட்கிறார்.

இதைக் கேட்ட இயேசு பிரான், தமக்கே உரிய சிறப்போடு, உவமை ஒன்றைக் கூறுகிறார். (இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், உவமைகள் வழியாக, அதிலும் எளிமையான உவமைகள் வழியாக, மக்களிடம் போதித்தவர் இயேசு பெருமகனார் ஆவார்.)

இதோ அவர் கூறிய உவமை:

“ஒருவர் எருசலேமில் இருந்து எரிகோ என்ற நகருக்குப் போனார். போகும்போது கள்வர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டார். அவருடைய ஆடைகளை, அவர்கள் உரிந்தனர். அவரை நையப் புடைத்தனர். குற்றுயிராக விட்டு விட்டு போய் விட்டனர். குரு ஒருவர் தற்செயலாக அவ்வழியே வந்தார். அவர், தாக்கப்பட்டவரைக் கண்டதும், மறுபக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும், அவ்விடத்திற்கு வந்து, அவரைக் கண்டார். அவரும் மறுபக்கமாக விலகிச் சென்றார்.

ஆனால், அவ்வழியாகப் பயணம் செய்த சமாரியர் ஒருவர், அவர் மீது பரிவு கொண்டார். அவரை அணுகினார். அவரது காயங்களில் திராட்சை மதுவும், எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டினார். தாம் பயணம் மேற்கொண்ட விலங்கின் மீது அவரை ஏற்றினார். ஒரு சாவடிக்குக் கொண்டு சென்று, அவரைக் கவனித்துக் கொண்டார்.

மறுநாள் இரண்டு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்தார். பின் சாவடிப் பொறுப்பாளரைப் பார்த்து, ‘இவரை நன்றாகக் கவனித்துக் கொள்ளும். இதற்கு மேல் செலவானால், நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்’ என்றார். கள்வரின் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு பெருமகனார் கேட்டார்.

அதற்கு, திருச்சட்ட அறிஞர், ‘அவருக்கு இரக்கம் காட்டியவரே’ என்றார். உடனே இயேசு பெருமான், அவரைப் பார்த்து, ‘நீரும் போய் அப்படியே செய்யும்’ என்று கூறினார்.

புனித லூக்காவின் இந்நற்செய்தியை ஒருகணம் சிந்தித்து ஆராய்வோம்.

மனித நேயத்தின் வெளிப்பாடு, இந்த நற்செய்தியில் எடுத்துரைக்கப்படுகிறது. ‘அயலான்’ என்பவன் யார்? இவ்விடத்தில் நாம் என்ன உணர்கிறோம்?

‘யாருக்கு உதவிக்கரம் தேவைப்படுகிறதோ, அவரே நமது அயலான்’ என்று, இந்த இடத்தில் நல்ல சமாரியனின் உவமை வழியாக இயேசு பெருமான் நமக்கு உணர்த்துகிறார்.

அயலானை வெறுத்து விட்டு, ஆண்டவரை அன்பு செய்வதாகக் கூறுபவர்கள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

இவ்வாசகத்தில், ‘நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்’ என்ற வினாவைத் தொடுக்கிறார், திருச்சட்ட அறிஞர். அதற்கு அவரின் விடை, விடையாக வருவதற்கு முன், மீண்டும் வினாவாக வருகிறது. ‘திருச்சட்ட நூலில் என்ன எழுதி இருக்கிறது? என்ன வாசிக்கிறீர்?’ என்று கேட்டதும், அவர் திருச்சட்டத்தில் உள்ளதை அப்படியே கூறுகிறார்.

முதலில் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக என்று சொல்லி விட்டு, அடுத்து வரும் வாசகத்தை நினைவில் ஏந்துவோம்.

‘உன் மீது, நீ அன்பு கூர்வது போல, உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக!’ என்று வருகிறது.

எல்லோரும் அவரவரை வெறுப்பதில்லை. அவரவரும், அவரவர்கள் மீது அன்பு கொள்வது, இயல்பாக இருக்கக் கூடியது. அதைப்போல, அடுத்தவர் மீது அன்பு செலுத்த வேண்டும் என்கிறார்.

‘தன்னைப்போல், பிறரையும் நேசி’ என்பதுதான், இயேசு பெருமானின் வாழ்க்கைத் தத்துவம்.

இவ்விடத்தில் அயலான் யார்? என்ற வினாவுக்கு, ஓர் உவமையை, வெகு அழகாக எடுத்துக் கூறி, கேட்பவரிடமே, விடையைத் தேடுகிறார். தேடுகிறார் என்று சொல்வதை விட, தேட வைக்கிறார் என்பதுதான் சரியானது.

அன்பு ஒன்றுதான், மனிதர்களை இணைக்கும். கருணை உள்ளம் மட்டும்தான், மனித குலத்தை நெறிப்படுத்தி வாழ வைக்கும்.

இவ்விடத்தில், குரு ஒருவர் மேற்கொள்ளும் பயணம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? குற்றுயிராய்க் கிடப்பவரைப் பற்றிக் கவலை கொள்ளாத பயணமாக இருக்கிறது. லேவியர் ஒருவரின் பயணம் எப்படிப்பட்டதாக உள்ளது? குருவைப் போலவே கவலை கொள்ளாமல், வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும் பயணமாக இருக்கிறது. சமாரியர் ஒருவரின் பயணம் எப்படி இருக்கிறது? அன்பைக் காட்டும் பயணமாக, பிறருக்கு, அதிலும் முக்கியமாக துன்பப்படும் ஒருவருக்கு, முற்றிலும் உதவிடும் செயல்பாட்டின் பயணமாக இருக்கிறது.

இயேசு பெருமானின் அடிப்படைக் கருத்தே, மனித நேயம்தான் என்பதை நாம் உணர வேண்டும். இதில் இனம், ஊர், என்பதெல்லாம் தேவையற்ற ஒன்றாகி விடுகிறது.

உதவி தேவைப்படும் ஒருவனுக்கு, உதவிக்கரம் நீட்டாமல், ஆண்டவரை அன்பு செய்கிறேன் என்று கூறுபவர்கள் பொய்யர்கள் என்பதுதான் இங்கு உணர்த்தப்படுகிறது.

அன்பும், பரிவும், அயலவருக்கு உதவி செய்வதில்தான் அடங்கியிருக்கிறது. இப்படிப்பட்ட ஒருவர்தான், நிலையான வாழ்வை, உரிமை உடையதாக ஆக்கிக் கொள்ள முடியும்.

‘உன் மீது அன்பு கூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’ என்ற வாசகத்தை எண்ணி ஒவ்வொருவரும் வாழ்வார்களேயானால், மனித குலம் மாண்புடன் வாழும்; பகை ஒழியும். நிறை வாழ்வும், நிலைத்த வாழ்வும் நம்மைச் சேரும்.

-தொடரும்.

மேலும் செய்திகள்