பொறுப்பும் சுறுசுறுப்பும்

நற்செய்தியாளர் புனித லூக்கா எழுதிய இந்நற்செய்தியை மிகவும் கவனமாகவும், நுட்பமாகவும், ஆழமாகவும் எண்ணிப் பார்த்தல் நல்லது. நீண்ட ஒரு நற்செய்தியாக இது சுட்டப்படுகிறது.

Update: 2017-12-19 05:49 GMT
நற்செய்தி சிந்தனை

- செம்பை சேவியர்


இயேசு பெருமகனார் இவ்வுலகத்தில் வாழ்ந்த காலத்தில், எருசலேம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர் சொன் னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், இறைவனின் ஆட்சி உடனடியாக, வெகு விரைவில் வரப்போகிறது என்று நினைத்தனர். அந்தச் சமயத்தில், வழக்கம்போல் மேலும் ஓர் உவமையை அவர்களுக்குச் சொன்னார்:

“உயர்ந்த குடிமகன் ஒருவர், ஆட்சி உரிமையைப் பெற்று வருவதற்காக தொலைவில் உள்ள நாட்டிற்குப் போவதற்குப் புறப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய பணியாளர்கள் பத்து பேரை அழைத்தார். பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து, அவர்களை நோக்கி, ‘நான் வரும் வரை, இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்’ என்று சொன்னார். ஆனால் அவருடைய குடிமக்களோ, ஆட்சியாளரை வெறுத்தனர். ஆகவே, ‘இவர் எங்களுக்கு அரசராக இருப்பது, எங்களுக்கு விருப்பம் இல்லை’ என்று கூறி தூது அனுப்பினார்கள். இருந்தாலும் அவர், ஆட்சி உரிமையைப் பெற்றுத் திரும்பி வந்தார். பிறகு தம்மிடம் பணம் பெற்றிருந்த பணியாளர்கள் ஒவ்வொருவரும், வணிகத்தில் ஈட்டியது எவ்வளவு என்று அறிவதற்கு, அவர் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார்.

முதல் பணியாளர் அங்கு வந்தார். ‘ஐயா! உமது மினாவைக் கொண்டு, பத்து மினாக்களைச் சேர்த்துள்ளேன்’ என்று கூறினார். அதற்கு, ஆட்சியின் உரிமையாளர், ‘நன்று. நல்ல பணியாளரே! மிகச் சிறிய பொறுப்புகளில், நம்பிக்கைக்கு உரியவராக இருந்தீர். எனவே பத்து நகரங்களுக்கு அதிகாரியாய் இரும்’ என்றார்.

இரண்டாம் பணியாளர், அதற்கு அடுத்தாற்போல் வந்தார்.

‘ஐயா! உமது மினாவைக் கொண்டு ஐந்து மினாக்களைச் சேர்த்துள்ளேன்’ என்றார். மகிழ்ச்சியடைந்த அவர், ‘நீர் ஐந்து நகரங்களுக்கு அதிகாரியாய் இரும்’ என்று அவரிடமும் கூறினார்.

வேறு ஒருவர் அவரிடம் வந்து, ‘ஐயா! இதோ! உமது மினா. ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன். ஏனென்றால், நீர் கண்டிப்புள்ளவர் என்பதை அறிவேன். ஆகவே, உமக்குப் பயந்து கொண்டு, இப்படிச் செய்தேன். நீரோ! வைக்காததை எடுக்கிறவர். விதைக்காததை அறுக்கிறவர்’ என்று கூறினார்.

அதற்கு ஆட்சியின் உரிமையாளர், அந்தப் பணியாளரிடம், ‘பொல்லாத பணியாளனே! உன்னுடைய வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பு இடுகிறேன். நான் கண்டிப்பானவன். வைக்காததை எடுக்கிறவன். விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா? அப்படியானால், ஏன் என்னுடைய பணத்தை, வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்த பிறகு வட்டியோடு சேர்த்து வாங்கியிருப்பேனே’ என்றார்.

பிறகு அருகில் நின்றவர்களிடம், ‘அந்த மினாவை எடுத்து, பத்து மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள்’ என்று கூறினார். அதற்கு அவர்கள், ‘ஐயா! அவரிடம் பத்து மினாக்கள் இருக்கிறதே’ என்று பதில் கூறினார்கள். அதற்கு அந்த உரிமையாளரோ, அவர்களைப் பார்த்து, ‘உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிடம் இருந்து உள்ளதும் எடுக்கப்படும் என்று, உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார்.

மேலும் அவர், ‘நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை, இங்கு கொண்டு வந்து என் முன் படுகொலை செய்யுங்கள்’ என்று சொன்னார்.

இவற்றை அவ்விடத்தில் சொன்ன பிறகு, அவர்களுக்கு முன்பாக எருசலேமுக்குப் புறப்பட்டுப் போனார்.”

இந்நற்செய்தியை ஒருகணம் மீண்டும் சிந்திப்போம். இந்த உவமையில் வரக்கூடிய மூன்றாவது பணியாளரின் செயல்பாடு என்ன என்பதை அறிந்தோம். எந்தவிதப் பொறுப்பும் இல்லாமல், சோம்பேறியாக இருப்பதோடு மட்டும் அல்லாமல், தன்னுடைய தலைவரின் குறைகளை மட்டும் காணக்கூடிய வராகவும் இருக்கிறார். ஆகவே அவரிடம் இருந்து பறிக்கப்படுகிறது.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் நிலை இதுதான். தங்களுடைய குறைகளை மட்டும் சுட்டிக் காட்டினால், ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அக்காலத்தில் வாழ்ந்த ஆட்சியாளர்கள், பணியாளர்கள், குடிமக்கள் இவர்களின் நிலைகளெல்லாம் இப்படித்தான் இருந்தன. நான் எப்படிப்பட்டவன் என்பதைத் தெரிந்தும் நீ நடந்து கொண்ட விதம் சரியில்லைதானே! என்று அவனுடைய பேச்சுக்கு, எதிர் பேச்சுப் பேசுகிறார். தீர்ப்பும் கூறு கிறார்.

மற்றவரின் குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டும் மனநிலை என்றுமே இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட மனநிலை இருக்குமேயானால், வாழ்க்கையில் எந்தவிதமான முன்னேற்றமும் இருக்காது. பொதுவாக ஆட்சியாளரின் மனநிலை அப்படித்தான் இருக்கத் தோன்றும். இது இவ்வுலகம் சார்ந்தது. இயல்பாக நடந்திருப்பது.

இந்நற்செய்தியைப் படிக்கும் நாம், பொறுப்பும், சுறுசுறுப்பும் தேவை என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்

‘நீர் கண்டிப்புள்ளவர். உமக்குப் பயந்து இப்படி முடிந்து வைத்தேன் என்றும், நீர் வைக்காததை எடுக்கிறவர். நீர் விதைக்காததை அறுக்கிறவர்’ என்றும் பணியாள் சொன்னதும் அவருக்குக் கோபம் வருகிறது. இவனுடைய பேச்சு, பகைவர்களைத் தண்டித்துக் கொலை செய்யும் அளவுக்குக் கொண்டு செல்கிறது. ஆகவே, பிறர் குறையை மட்டும் கூறிக் கொண்டிராமல், தன் குறையை உணர்ந்து செயல் படுவது நல்லது என்பதை நற்செய்தியின் உவமை வாயிலாக உணர்வோம். அக்காலத்தவர்களின் கடின உள்ளத்தை, அவர் உணர்ந்ததனால், இப்படிப்பட்ட உவமையைக் கூறு கிறார் என்பதையும் அறிவோமாக!

-தொடரும்.

மேலும் செய்திகள்