பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்- திரளான பக்தர்கள் தேர் இழுத்தனர்

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு புதிதாக தேர் செய்யப்பட்டு தேரோட்டம் நடைபெற்றுள்ளது.;

Update:2025-06-08 18:53 IST

கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரத்தில் உள்ளது தேனுபுரீஸ்வரர் கோவில். மிகப் பழமையான கோவில்களில் இந்த கோவிலிலும் ஒன்று. தேவலோகப் பசு காமதேனுவின் மகள் பட்டி இத்தலத்தில் இறைவனை பூஜித்ததால் இத்தலம் பட்டீஸ்வரம் என்று பெயர் பெற்றதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

கோவில் வடக்கு வாசலில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக புகழப்படுகிறது. துர்க்கை அம்மனுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் எலுமிச்சை பழ தோலில் நெய் விளக்கேற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம்.

இக்கோவிலில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு தேர் இருந்ததாகவும், தேரோட்டம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் தேர் சிதைந்ததன் காரணமாக தேர் திருவிழா நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2021- 22 ஆம் ஆண்டு பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு புதிய திருத்தேர் செய்வதற்காக ரூபாய் 87 லட்சம் ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக திருத்தேர் கட்டுமான பணிகள் நடைபெற்றன. பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் 25ஆம் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

வெள்ளோட்டத்திற்கு பின்பு தேரோட்டத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, இன்று காலை 9 மணிக்கு தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் நிர்மலாதேவி , அறங்காவலர் குழு தலைவர் அய்யப்பன் மற்றும் உறுப்பினர்கள் டாக்டர் பழனிவேலு, ஆசைத்தம்பி, மின்னல்கொடி, பாலகுரு ஆகியோரின் தலைமையில் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்