கற்களைக் காணிக்கையாகப் பெறும் சிவன்

பரிபூரண பரம்பொருளாம், சைவ சமயத்தின் யோகி சிவபெருமான் அமைந்திருக்கும் கோவில்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும்.

Update: 2018-02-21 10:23 GMT
லயங்கள் என்றாலே அதிசயங்கள் நிறைந்ததாகத்தான் இருக்கிறது. நாட்டின் பல பகுதிகளிலும் வித்தியாசமான தோற்றத்திலும், வித்தியாசமான வழிபாட்டிலும் ஆச்சரியமூட்டும் ஆலயங்கள் பல இருக்கின்றன. அவற்றுள் ஒன்றைத் தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம்.

சைவத்தின் முழு முதற்கடவுளாக திகழும் சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், அருளுல், மறைத்தல் என்ற ஐந்து தொழில்களையும் செய்து வருகிறார். அதன் மூலம் உலக உயிர் களின் ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை போக்கி வீடுபேறு அருள்கிறார். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஈசன், வித்தியாசமான தோற்றத்தில் வீற்றிருக்கும் ஆலயம் கர்நாடக மாநிலத்தில் இருக்கிறது.

500 ஆண்டு பழமை

கர்நாடக மாநிலம் மண்டியா தாலுகாவில் கோடிகல்லின காடு பசப்பா என்ற பெயரிலும், மைசூரு தாலுகா வஜமங்களா கிராமத்தில் பசப்பா என்ற பெயரிலும் ஈசனுக்கு சிறப்புமிகு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன.

இதில் கோடிகல்லின காடு பசப்பா கோவிலைப் பற்றி இங்கு காண்போம்.

கோடிகல்லின காடு பசப்பா கோவில், 500 ஆண்டுகள் பழமையானது. இதற்கு புராண ரீதியான தலவரலாறு இருப்பதாக தகவல்கள் இல்லை. இருப்பினும் இக்கோவில் தோன்றியதாக ஒரு வரலாறு மக்களால் சொல்லப்படுகிறது. அதுபற்றி பார்க்கலாம்.

சுமார் 500 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் இருந்த மக்கள், விவசாயத்தை தலையாய தொழிலாக செய்து வந்தனர். மேலும் கால்நடை களையும் வளர்த்து வந்தனர். அப்போது விவசாயம் செழிக்கவும், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடவும், ஏரி, குளம், குட்டைகள் நிரம்பவும் வேண்டி, காட்டுப்பகுதியில் லிங்க வடிவில் இருந்த கல்லை பசப்பாவாக (சிவன்) நினைத்து பூஜித்து வேண்டினர். அவர்கள் வேண்டிய படியே மழை பொழிந்து ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏரி, குளம், குட்டைகள் நிரம்பின.

ஆனால் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய பசப்பாவுக்கு காணிக்கை செலுத்த விவசாயி களிடம் ஒன்றும் இல்லை. வறுமையால் வாடிய அவர்கள், தங்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் இருந்து 3 கற்களை எடுத்து வந்து பசப்பாவுக்கு காணிக்கையாக கொடுத்தனர். விவசாயிகள் கொடுத்த அந்த காணிக்கையை சிவன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாராம்.

சக்தி வாய்ந்தவர்

அதுமுதல் இக்கோவில் `காடு பசப்பா கோவில்' என்றும், கோடிகல்லு பகுதியில் அமைந்திருப்பதால் இந்த ஆலயம், ‘கோடிகல்லின காடு பசப்பா கோவில்’ என்றும் அழைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் சிவன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும், பக்தர்கள் வேண்டிய காரியங்களை அவர் நடத்தி வைப்பார் என்றும் நம்பப்படுகிறது.

இப்படி பல்வேறு சிறப்புமிக்க இக்கோவிலில் சிவனுக்கு திருவுருவம் கிடையாது. கோவிலுக்கு என்று பூசாரிகளோ, பூஜை முறைகளோ எதுவும் இல்லை. பக்தர்கள் நேரில் சென்று அங்கு கல் வடிவில் வீற்றிருக்கும் சிவபெருமானிடம் வேண்டிவிட்டு செல்வார்கள். தாங்கள் நினைத்தபடி பூஜை செய்வார்கள். வேண்டுதல் வைக்க வரும் பக்தர்கள் அனைவரும் காணிக்கையாக சிவனுக்கு கற்களைத் தான் கொடுத்து வருகிறார்கள். அதுவும் அவர் களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள கற்களைத் தான் காணிக்கையாக கொடுக்க வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

திங்கட்கிழமை பூஜை

இவ்வளவு பெரிய கல்லைத்தான் காணிக்கையாக கொடுக்க வேண்டும் என்று எந்த உத்தரவும் கிடையாது. பக்தர்கள் தங்களுடைய நிலங்களில் இருந்து 3 அல்லது 5 கற்களை எடுத்து வந்து காணிக்கையாக செலுத்தலாம். அதுவும் அந்த கற்களை தாங்களாகவே சுமந்து வந்துதான் செலுத்த வேண்டும். அது மிகச்சிறிய கற்களாக இருந்தாலும் சரி, பெரிய கற்களாக இருந்தாலும் சரி. எந்தக் கல்லாக இருந்தாலும் அதை சிவன் காணிக்கையாக ஏற்றுக் கொள்வார்.

இக்கோவிலில் ஒவ்வொரு வாரமும் திங்கட் கிழமை அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அப்போது பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு, தங்களால் முடிந்த சிறிய அல்லது பெரிய அளவிலான கற்களை கொண்டுவந்து சிவனுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

குவியல், குவியலாக கற்கள்

இக்கோவிலில் சிவனின் திருவுருவமாக கருதப்படும் லிங்க வடிவத்தை ஒத்த அந்த கல், வெட்டவெளியில் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் கோபுரங்களோ, சன்னிதிகளோ கிடையாது. மேலும் இங்கு கோவில் கட்டினால், அது சிவனுக்கு எதிரானது என்று கிராம மக்கள் சொல்கிறார்கள். தற்போது சிவனின் திருவுருவமாக கருதப்படும் அந்தக் கல்லைச் சுற்றிலும் சிமெண்டு காரை போடப்பட்டு இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மற்றபடி மேற்கூரை எதுவும் அமைக்கப் படவில்லை. மேலும் இக்கோவிலில் இதுவரையில் திருவிழாக்களோ, தேரோட்டமோ நடந்தது இல்லை என்றும் சொல்லப்படுகிறது. பக்தர்கள் மட்டும் வந்து வேண்டுவதும், பின்னர் தாங்கள் காணிக்கையாக கொண்டு வந்த கற்களை கோவிலைச் சுற்றி போட்டுவிட்டுச் செல்வதும் மட்டுமே வாடிக்கையானது. இதனால் கோவிலைச் சுற்றி குவியல், குவியலாக கற்கள் கிடக்கின்றன.

இந்த சிவனை ஒவ்வொரு திங்கட்கிழமையும் தரிசித்தால் திருமணத்தடை, குடும்ப பிரச்சினை, சொத்து பிரச்சினை உள்ளிட்ட சகல பிரச்சினைகளும் தீரும் என்றும், வேண்டிய காரியங்கள் நிறை வேறும் என்றும் நம்பப்படுகிறது.

அமைவிடம்

இக்கோவில் மண்டியா தாலுகா கிரகண்டூர்- பேவினஹள்ளி சாலையில் அமைந்துள்ளது. மண்டியா டவுனில் இருந்து இக்கோவிலுக்கு என்று நேரடியாக பஸ்கள் கிடையாது. மண்டியாவில் இருந்து கிரகண்டூர் கிராமத்திற்கு சென்று, அங்கிருந்து வாடகை கார், ஆட்டோ அல்லது மினி பஸ் மூலமாக இக்கோவிலுக்கு செல்லலாம். 

மேலும் செய்திகள்