வைகுண்ட ஏகாதசி திருவிழா: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 15 லட்சம் பக்தர்கள் தரிசனம்

சொர்க்கவாசல் திறப்பின்போது மட்டும் 1 லட்சத்து 74 ஆயிரத்து 501 பக்தர்கள் கலந்து கொண்டனர்.;

Update:2026-01-11 08:43 IST

திருச்சி,

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்து சென்றனர். பகல் பத்து உற்சவத்தின் 10 நாட்களில் மொத்தம் 6 லட்சத்து 17 ஆயிரத்து 706 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். 10-ம் நாள் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாளை தரிசிக்க 60 ஆயிரத்து 525 பக்தர்கள் குவிந்தனர். ராப்பத்து உற்சவத்தில் முதல் நாள் பரமபத வாசல் (சொர்க்கவாசல்) திறக்கப்பட்டு அதன் வழியாக நம்பெருமாள் எழுத்தருளினார்.

நம்பெருமாளுடன் சேர்ந்து சொர்க்கவாசலை கடந்தால் சொர்க்கத்தை அடையலாம் என்ற நம்பிக்கையின் காரணமாக அன்று மட்டும் 1 லட்சத்து 74 ஆயிரத்து 501 பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் புத்தாண்டு அன்று மட்டும் 1 லட்சத்து 17 ஆயிரத்து 590 பேர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துள்ளனர். வைகுண்ட ஏகாதசி திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், தக்கார் ஞானசேகரன் மற்றும் கோவில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இந்தநிலையில் வைகுண்ட ஏகாதசி விழா தொடக்க நாள் முதல், 8-ந்தேதி வரை 20 நாட்களில் 15 லட்சத்து 18 ஆயிரத்து 47 பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து நம்பெருமாளை தரிசனம் செய்துள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்