சங்கீத சக்கரவர்த்தியாக்கும் மப்பேடு சிங்கீஸ்வரர்

மோகினி அவதாரம் எடுத்த திருமால், தன்னுருவம் பெற வழிபட்ட தலம் மப்பேடு சிங்கீஸ்வரர் திருக்கோவில்.

Update: 2018-03-01 22:30 GMT
அனுமனும், சிங்கியும் இசை எழுப்ப சிவபெருமான் ஆடி மகிழ்ந்த அற்புத ஆலயம், வீணை தாங்கிய அனுமன் வீற்றிருக்கும் திருக்கோவில், இசைத்துறையில் புகழ்பெற உதவும் திருத்தலம், மூல நட்சத்திரக்காரர்கள் குறை நீக்கும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது, திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு சிங்கீஸ்வரர் திருக்கோவில்.

தேவர்களும், அசுரர்களும், பாற்கடலைக் கடைந்தபோது, அதில் இருந்து அமிர்தம் வெளிப்பட்டது. அமிர்தத்தை தேவர் களுக்கும், அசுரர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதற்காக திருமால், மோகினி வடிவம் எடுத்தார். பின்னர் தன்னுடைய மெய்யான திருமால் வடிவத்தைப் பெறுவதற்காக அவர் வழிபட்ட தலம் இது என்பதால் ‘மெய்ப்பேடு’ என்று பெயர் பெற்றது. மெய்– உண்மை, பேடு– பெண். இந்த மெய்ப்பேடு என்பதே காலப்போக்கில் மருவி ‘மப்பேடு’ என்றானதாக கூறப்படுகிறது.

தொன்மைச் சிறப்பு

விசுவநாத நாயக்கர் ஆட்சியில் அமைச்சராகப் புகழ் பெற்று விளங்கியவர் அரியநாத முதலியார். இவர் திருமலை நாயக்கரிடம் அலுவலராக இருந்த காளத்தியப்ப முதலியார் மகன் ஆவார். இவர் பிறந்த ஊர் மெய்ப்பேடு எனும் மப்பேடு ஆகும். இவரே விசுவநாத நாயக்கர் காலம் முதல் இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் காலம் வரை முக்கிய ஆலோசகராக விளங்கியவர். இந்த ஆலயத்தின் ஐந்துநிலை ராஜகோபுரம், மதிற்சுவர், கல் மண்டபம், வசந்த மண்டபம் முதலானவற்றை அரியநாத முதலியாரே கட்டியதாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில், இப்பகுதி முதலியார் சமூகத்தினர் பாண்டிய நாட்டிற்குக் குடியேற்றப்பட்டனர். சோழவந்தான், திருநெல்வேலி, முதலிய பகுதியில் இவர்கள் குடியேறினர். இன்றும் இவர்கள் தொண்டை மண்டல முதலியார் என வழங்கப்படுகின்றனர்.

முந்தைய காலத்து தொண்டை நாடு 24 கோட்டங்களையும், 79 நாடுகளையும் கொண்டு விளங்கியதை, ‘தொண்டை மண்டல சதகம்’ குறிப்பிடுகிறது. செங்காடு கோட்டத்தில் செங்காடு நாட்டில் அமைந்த ஊராக மப்பேடு விளங்கியது.

இந்த ஆலயத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வின் போது, ஆலயத்தின் பிரதான கோபுர உச்சியில், கி.பி. 1947–ம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கையில் இரண்டாம் ஆதித்திய கரிகாலசோழன் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. அந்தக் கல்வெட்டு, விளக்கெரிக்க கொடையளித்த விவரத்தையும், இவ்வாலயம் கி.பி. 967–ல் இரண்டாம் ஆதித்திய கரிகால சோழனால் கட்டப்பட்டதையும் உறுதி செய்கின்றது.

சிங்கீஸ்வரர்

திருவாலங்காட்டில் சிவபெருமான் ஊர்த்துவத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது மிருதங்கம் வாசித்த ‘சிங்கி’ என்பவர் சிவபெரு    மானின் நடனத்தைக் காணாமல், இசைப்பதிலேயே கவனமாக இருந்தார். எம்பெருமானார் நடனத்தைக் காணமுடியவில்லையே என்று எண்ணி வருந்தியபோது, அன்றிரவு அவர் கனவில் தோன்றிய இறைவன், ‘மெய்ப்பேடு திருத்தலத்தில் உள்ள சிவலிங்கத்தை வழிபட்டால்  மீண்டும் எனது காட்சியைக் காணலாம்’ என்றார். அதன்படி, மெய்ப்பேடு சென்ற சிங்கிக்கு, சிவபெருமான் நடனமாடி காட்சிதந்தார். இதனால் இத்தலத்து இறைவன், ‘சிங்கி + ஈஸ்வரன் = சிங்கீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

சுவாமியின் சன்னிதிக்கு வலதுபுறம் அம்மன் சன்னிதி அமைந்துள்ளது. நறுமணம் மிகுந்த மலருக்கு உரியவள் என்ற பொருளில் ‘ஸ்ரீ புஷ்பகுஜாம்பாள்’ என்ற திருநாமத்துடன் அன்னை காட்சி தருகின்றாள். இவளே பூமுலைநாயகி என்றும் அழைக்கப்படுகின்றாள். சதுரமான கருவறையில் நின்றகோலத்தில் கிழக்கு முகமாய் வீற்றிருந்து அருளாசி வழங்குகிறாள், இந்த அன்னை.

கருவறை முன் உள்ள அர்த்தமண்டபம் இரு வரிசையில் நான்கு தூண்கள், முன் மண்டபம் பன்னிரண்டு தூண்கள் தாங்கி நிற்கின்றது.   இத்துடன் விஜயநகர கால பூ வேலைப்பாடுகள், இறை உருவங்கள், விலங்குகள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன.

ஆலய அமைப்பு

தென்கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம், ஏழு கலசங்களைத் தாங்கி கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. ராஜகோபுரம் முழுவதுமே கலை நயமிக்க சுதைச் சிற்பங்களைக் கொண்டு கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகின்றன. ஆலயமானது கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றை உள்ளடக்கி அமைந்துள்ளது.

மகா மண்டபத்தின் முன்பாக செவ்வக வடிவ முன்மண்டபம் அமைந்துள்ளது. தென்புற நுழைவு வாசலில் நடராஜர் சபை இருக்கிறது. அர்த்த மண்டபபுறச் சுவரில் தெற்கே விநாயகர், வடக்கே துர்க்கை ஆகியோரது திருமேனிகள் உள்ளன. கருவறையைச் சுற்றி தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, அதன் அருகே சண்டிகேஸ்வரர் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். ஆலயச் சுற்றில் இடம்புரி விநாயகர், வள்ளி– தெய்வானை சமேத முருகப்பெருமான், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய ஆதிகேசவப் பெருமாள், விரபாலீஸ்வரர், வீணை ஆஞ்சநேயர், காலபைரவர், சூரியன் ஆகியோர் சன்னிதிகள் அமைந்துள்ளன.

இந்த ஆலயத்தின் தல மரமாக இலந்தை மரமும், தல தீர்த்தமாக வெண் தாமரைக் குளமும் உள்ளன. இந்தக் கோவிலில் சிவாலயங்களில் நடைபெறும் அனைத்து விசே‌ஷங் களும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. பிரதோ‌ஷம், ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், ஆவணி சதுர்த்தி உள்ளிட்ட விழாக்கள் விமரிசையாக நடைபெறுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டத்தில் பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது மப்பேடு திருத்தலம். பூந்தமல்லியில் இருந்து 26 கி.மீ. தொலைவிலும், காஞ்சீபுரத்தில் இருந்து 41 கிலோமீட்டர் தூரத்திலும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 38 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த திருத்தலம் இருக்கிறது.

–பனையபுரம் அதியமான்.


வீணை ஆஞ்சநேயர்

சிவபெருமான் திருநடனம் புரிந்த இந்த ஆலயத்தில், ஈசனின் நடனத்திற்கு ஆஞ்சநேயர் வீணை இசைத்ததாக கூறப்படுகிறது. ஆஞ்சநேயர், விரபாலீஸ்வரர் சன்னிதியின் எதிரில் நின்று வீணையை இசைத்து சிவபெருமானின் அருளைப் பெற்றதாக தல புராணம் தெரிவிக்கிறது. ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். அதே போல் வீணையை கையில் ஏந்தியிருக்கும் கலைமகளான சரஸ்வதி தேவியும் மூல நட்சத்திரத்தில் தோன்றியவர். எனவே இத்தலத்தில் வீணையுடன் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரை வணங்கினால், இசைத்துறையில் சங்கீத சக்ரவர்த்தியாகலாம் என்றும், இத்தலம் மூல நட்சத்திரம் உள்ள வர்களின் குறைகளை நீக்கும் தலம் என்றும் பக்தர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.

மூட்டு வலி நீக்கும் கல்

ஆலயத்தில் உள்ள நந்தி மண்டபத்தின் முன்பாக, நவ வியாகரணக் கல் என்னும் சிறிய கருங்கல் ஒன்று காணப்படுகிறது. தீராத மூட்டு வலி உள்ளவர்கள், மருத்துவம் பார்ப்பதோடு நில்லாமல், இந்தக் கல்லின் மீது  நம்பிக்கையோடு ஏறி நின்று நந்தியையும், இறைவனையும்  மனமுருகி வேண்டிக் கொண்டால், வலியின் தாக்கம் படிப்படியாக குறையும் என்கிறார்கள். இந்த வழிபாட்டை பிரதோ‌ஷம் மற்றும் கார்த்திகை சோம வாரங்களில் செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என்கிறார்கள், பலன் பெற்ற பக்தர்கள்.

மேலும் செய்திகள்