ஆன்மிகம்
இறை பிரசன்னமும், இறை சித்தமும்

நீதி எனக்கு வேண்டாம் நீதியின் ஆண்டவர் வேண்டும். நிலம் எனக்கு வேண்டாம் நிலத்தின் உரிமையாளர் வேண்டும். இது தாவீது மன்னனின் வேட்கையாய் இருந்தது.
நீதியின் ஆண்டவரும், நிலத்தின் உரிமையாளரும் கடவுளே என்பதை தாவீது அறிந்திருந்தார். கடவுள் தருவதில் அல்ல, கடவுளிடம் மட்டுமே மகிழ்ச்சியும், அமைதியும் உண்டு என்பதை தாவீது உணர்ந்திருந்தார்.

‘பிற தெய்வங்களின் பெயரைக் கூட நான் உச்சரிக்க மாட்டேன்’ என்கிறார் அவர். “அன்னிய தெய்வங்களின் பெயரை நீங்கள் சொல்லவேண்டாம்” எனும் கடவுளின் கட்டளையை அவர் பின்பற்றினார்.

இறை பிரசன்னத்தில் வாழ்வதையும், இறை சித்தத்தை நிறைவேற்றுவதையுமே அவர் தனது வாழ்க்கையில் முதன்மையாய்க் கொண்டிருந்தார்.

எல்லாவற்றையும் விட இறைவனே தனக்கு எல்லாம் என, இறைவனிடம் நம்மை நாம் அர்ப்பணிக்க வேண்டுமெனில் நமக்கு இரண்டு அனுபவங்கள் தேவை.

ஒன்று: இறை பிரசன்னம், இன்னொன்று: இறை சித்தம்.

இறை பிரசன்னம் நம்மோடு இருக்கையில் நாம் இறை சித்தத்தை மட்டுமே செய்வோம்.

இறை பிரசன்னம்

ஏசாயா 6-ம் அதிகாரம் இறை பிரசன்னத்தின் அற்புதமான உதாரணம். அதை விடச்சிறந்த ஒரு பகுதியை நாம் பார்க்கவே முடியாது.

ஏசாயா ஆலயத்தின் உள்ளே பிரவேசிக்கிறார். அப்போது இறை பிரசன்னத்தை உணர்கிறார். கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்ததும் தன்னுடைய நிலையை அவர் உணர்கிறார். தன்னுடைய நிலை உணர்ந்த உடனே தன்னுடைய பாவங்களை அறிக்கை செய்கிறார்.

பாவங்களை அறிக்கை செய்ததால் பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்கிறார். பாவ மன்னிப்பு கிடைத்ததும், கடவுளுடைய அழைப்பு தன்னுடைய செவிகளில் ஒலிப்பதைக் கேட்கிறார். கடவுளுடைய அழைப்பைக் கேட்டதும் தன்னை அதற்கு அர்ப்பணிக்கிறார்... என படிப்படியாக இறை பிரசன்னத்தை இந்த அதிகாரம் விளக்குகிறது.

“(இறைவன்) ஒருவரே சாவை அறியாதவர்; அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்; அவரைக்கண்டவர் எவருமிலர்; காணவும் முடியாது” (1 திமோத்தேயு 6:16) என்கிறது பைபிள்.

இறை பிரசன்னத்தை யாரும் காணமுடியாது எனும் நிலையை மாற்றியவர் இறைமகன் இயேசு. அவரது சிலுவை நமக்கு மீட்புக்காய் தரப்பட்டிருக்கிறது. கிறிஸ்து நமக்கு தரப்படாவிட்டால் நாம் கடவுளோடு நெருங்கியிருக்க முடியாது. காண முடியாத அவரை நாம் கிறிஸ்துவில் காண்கிறோம்.

இறைவனின் பிரசன்னத்தை உணர்கிற உணர்வை நமக்கு சிலுவை பெற்றுத்தருகிறது. அதுவே மிகப்பெரிய பாக்கியம்.

ஒருவராலும் அவரை நெருங்கவும் முடியாது என்கிறது விவிலியம். மோசேயிடம் “நீ நிற்கும் இடம் பரிசுத்தமானது” என்கிறார் கடவுள்.

அப்படிப்பட்ட கடவுள் இன்று நமக்குள் வசிக்கிறார். அதெப்படி சாத்தியமானது? இறைமகன் இயேசுவின் சிலுவை மரணமே அதை சாத்தியமாக்கியிருக்கிறது.

இறை சித்தம்

இறை சித்தத்தை நிறைவேற்றுவதே கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படைத் தேவை.

“நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்து, கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ ..” (தீத்து 2 :12 )என விவிலியம் பேசுகிறது.

இறை சித்தம் நமது வாழ்க்கையில் நிகழ வேண்டுமெனில் நாம் தீய நாட்டங்களுக்கு மறுப்பு சொல்ல வேண்டும். தீய நாட்டங்களுக்கு மறுப்பு சொல்ல வேண்டுமெனில் பாவ இச்சையை வெறுக்க வேண்டும்.

“உலகம் மறைந்து போகிறது; அதன் தீய நாட்டங்களும் மறைந்து போகின்றன. ஆனால் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர் என்றும் நிலைத்திருப்பார்” (1 யோவான் 2:17) என்கிறது விவிலியம்.

இறை சித்தத்தை நிறைவேற்றுவது விருப்பு,

பாவ இச்சையை அகற்றுவது மறுப்பு.

திருத்தூதர் பவுல் இறை பிரசன்னத்தை உணர்ந்தவர், இறை சித்தத்தை நிறைவேற்றியவர். பழைய ஏற்பாட்டில் தாவீதைப் போல, புதிய ஏற்பாட்டில் பவுல் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

பவுல் கிறிஸ்தவர்களைக் கொல்லத்தேடியவர். எப்போது அவருக்கு இறைவனின் பிரசன்னம் கிடைத்ததோ, அப்போது இறை சித்தத்துக்கு தன்னை ஒப்படைத்தார். பின்னர், தனது விருப்பு வெறுப்புகளையெல்லாம் கடந்து இறைவனோடு பயணித்தார்.

தொடர்ந்து தனது வாழ்க்கையில் நிகழ்ந்த அனைத்தையும் இறைவனின் சித்தம் என எடுத்துக் கொண்டவர் அவர். திருச்சபையினரைச் சந்திக்கச் செல்வதையும், சந்தித்து திரும்பியதையும், நற்செய்தி அறிவித்தலுக்கு எழுந்த தடைகளையும் அதன்பின் நடந்த எல்லாவற்றையும் இறை சித்தம் என்கிறார்.

பழைய ஏற்பாட்டில் தாவீது இறை சித்தத்தை நிறைவேற்றினார் என்பதை புதிய ஏற்பாடும் பதிவு செய்கிறது. ‘ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்’ என தாவீது இறை சித்தத்தை நிறைவேற்றியதை திருத்தூதர் பணிகள் நூல் பேசுகிறது.

நமது வாழ்க்கையில் நாம் மனதில் இருத்த வேண்டிய விஷயமும் இது தான்: ‘இறை பிரசன்னத்தை அறிந்து கொள்தலும், இறை சித்தத்தை செயல்படுத்துதலும் மிகவும் அவசியம் ஆகும்’.

(தொடரும்)