பலிபீடம் தரும் பாடம்

தனக்கான பலி எப்படி இருக்கவேண்டும், தனக்கு பலி கொடுப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை மிகத்துல்லியமாக பழைய ஏற்பாட்டில் கடவுள் சொல்கிறார்.

Update: 2018-07-10 06:38 GMT
எகிப்து நாட்டில் அடிமைகளாய் இருந்த இஸ்ரேல் மக்கள், மோசே எனும் தலைவரின் கீழ் விடுதலையாகி கானானை நோக்கி நடக்கின்றனர். பாலை நிலத்தில் அவர்கள் நடந்த போது மேகத்தூணாகவும், நெருப்பாகவும் இறைவன் அவர்களோடு கூட இருக்கிறார்.

அதன்பின் அவர் மக்களோடு மக்களாக கூடாரத்தில் வசிக்க விரும்பினார். அதற்காக தன்னுடைய தூயகம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும், தனக்கான பலிபீடம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கடவுள் மோசேயிடம் விளக்கினார்.

பலிபீடத்துக்கு நான்கு முனைகள், ஐந்து முழம் அளவில் சதுர அமைப்பு போன்றவையெல்லாம் அவர் சொன்ன விதிகளில் சில.

கடவுளுக்கு பலி செலுத்தவும், குருத்துவப் பணி செய்வதற்கும் ஆரோனும் அவனுடைய குடும்பமும் திருநிலைப்படுத்த வேண்டும். அதற்கான வழி முறைகளையும் இறைவன் கொடுக்கிறார்.

“காளையின் ரத்தத்தை எடுத்து, பலிபீடத்தின் கொம்புகளில் உன் விரலால் பூசியபின், மீதி ரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடு” (யாத் 29:12) இது முதல் கட்டம்.

“இரண்டாவது, செம்மறிக்கடாவை வெட்ட வேண்டும். அதன் ரத்தத்தை எடுத்து ஆரோன் மற்றும் புதல்வர்களின் வலக்காது நுனியிலும், வலக்கால் பெருவிரலிலும் வைக்க வேண்டும். பலி பீடத்தைச் சுற்றி ரத்தம் தெளிக்க வேண்டும். மிச்ச ரத்தத்தை ஆரோன், அவர் புதல்வர்கள் ஆகியோர் மீதும் அவர்களுடைய உடைகள் மீதும் தெளிக்க வேண்டும்” (விடுதலைப்பயணம் 29: 19-21)

தனக்கான பலி எப்படி இருக்கவேண்டும், தனக்கு பலி கொடுப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை மிகத்துல்லியமாக பழைய ஏற்பாட்டில் கடவுள் சொல்கிறார். அதே போல, உலகின் மீட்பு எப்படி இருக்க வேண்டும், யாரால் நிகழ வேண்டும், அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதையும் மிகத் துல்லியமாக இறைவன் திட்டமிட்டி ருந்தார்.

அப்படி உலக பாவங்களைப் போக்க வந்தவர் தான் இயேசு. பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகள் எல்லாமே புதிய ஏற்பாட்டின் நிழல் உருவங்கள் என்கிறது விவிலியம். அப்படி, பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த பலிபீடம் கிறிஸ்துவின் நிழல் உருவம். “நமக்கு ஒரு பலிபீடம் உண்டு (எபிரேயர் 13:10) எனும் புதிய ஏற்பாட்டு வசனம் அதை எடுத்துக் காட்டுகிறது.

பழைய ஏற்பாட்டில், பலிபீடத்தைத் தரிசித்த பின்பு தான் ஒருவர் இறைவனின் அருகில் செல்ல முடியும். புதிய ஏற்பாட்டில், இறைமகன் இயேசுவின் மூலமாக மட்டுமே மீட்பை அடைய முடியும்.

பழைய ஏற்பாட்டு பலிபீடம் ஒரு மாற்றத்தின் அடையாளம், அந்த மாற்றத்துக்குப் பின்பே நாம் தூயகத்துக்குச் செல்ல முடியும். இன்று நமது மனமாற்றத்தின் கருவியாக இருப்பவர் இயேசுவே.

இந்த பலிபீடம் ‘நம்பிக்கை மிக்க அழைப்பு’ கொடுக்கப்படும் இடம். இந்த பலிபீடம் பாவங்களுக்கு பரிகாரம் கிடைக்கிற ஒரு இடம்.

பழைய ஏற்பாட்டு பலிபீடம் ஐந்து முழம் அளவு கொண்டது. ஐந்து என்பது இறை அருளின் எண். புதிய ஏற்பாட்டில் இறைவனின் அருள் இயேசுவின் வாழ்க்கை மூலம் வெளிப்படுகிறது.

அந்த பலிபீடத்தின் நான்கு கொம்புகளும் இயேசுவின் வல்லமையின் அடையாளம். நான்கு எனும் எண் படைப்போடு தொடர்புடையது. நான்கு திசைகளிலிருந்தும் மக்கள் கிறிஸ்துவிடம் வரலாம், அவர்களுக்கு மீட்பு உண்டு என்பதை அந்த எண் உணர்த்துகிறது.

இயேசுவின் வாழ்க்கையை விவிலியத்தில் நான்கு நற்செய்தியாளர்கள் எழுதியுள்ளனர். பலிபீடத்தின் நான்கு கொம்புகளும், இயேசுவின் வாழ்க்கையை நான்கு கோணத்தில் அணுகியிருக்கும் அந்த நான்கு நூல்களைக் குறிக்கின்றன.

மத்தேயு இயேசுவை அரசராகவும், மார்க் அடிமையாகவும், லூக்கா மனிதராகவும், யோவான் கடவுளாகவும் அணுகுகின்றார். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இயேசு மக்களின் மீட்பர் என்பது மட்டுமே மாறாத ஒன்று.

பாலை நில வாழ்விலே பலிபீடம் மக்களால் சுமந்து செல்லப்பட்டது. எந்த ஒரு கிறிஸ்தவனும் சிலுவையை சுமப்பதற்காய் அழைக்கப்பட்டி ருக்கிறான் என்பதன் அடையாளம் அது.

மனிதன், கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டவன். ஆனால் பாவத்தால் அழிவுக்கு உள்ளானான். பரிசுத்த ஆவியால் மீண்டும் அவன் பிறக்கிறான். கடைசியில் இறைமகன் இயேசுவுக்கு ஒப்பாக மாறுகிறான் எனும் படிப்படியான மாற்றத்தை பலிபீடம் கற்றுத் தருகிறது.

பலிபீடம் பாவ மன்னிப்பைத் தருகிறது. பலிபீடம் ஆண்டவ ரோடு நாம் இணைக்கப்படும் மீட்பைத் தருகிறது. பலிபீடம் நமக்கு நிலையான வாழ்வைப் பெற்றுத் தருகிறது. பரம தந்தையின் அருகாமையைத் தரிசிக்கும் பாக்கியத்தைத் தருகிறது.

இன்று சிலுவையே பலி பீடம். அதன் அடியில் நாம் நம்மை உணரவேண்டும். மனம் திரும்பவேண்டும். ஏழைகளுக்கு இரங்கும் மனம் கொண்டவர்களாக மாற வேண்டும். நற்செய்தியை பிறருக்கு அறிவிக்கும் மனிதர் களாக மாற வேண்டும்.

பலிபீடம் சொல்லும் இந்த பாடங்களைக் கற்றுக் கொள்வோம். 

மேலும் செய்திகள்