நம்பிக்கையினால் வரும் ஆசீர்வாதங்கள்

ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் உங்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன். இம்மட்டும் வழிநடத்தின தேவன் இனிமேலும் ஒவ்வொரு நாளும் உங்களை ஆச்சரியமான பாதையிலே வழிநடத்துவாராக.

Update: 2018-07-20 01:15 GMT
நம்பிக்கையினால் வரும் ஆசீர்வாதங்களைக் குறித்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் நம்பினால் நம்முடைய வாழ்விலே நாம் பெறும் ஆசீர்வாதம் என்ன?

இயேசுவை விசுவாசி

‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்’. அப்போஸ்தலர் 16:31

இயேசு கிறிஸ்துவே உண்மையான இரட்சகர். அவர் ஒருவரால் மாத்திரமே இந்த பாவம் நிறைந்த உலகிலே இரட்சிப்பைத் தர முடியும் என்பதை நாம் நம்பும் போது நாம் இரட்சிக்கப்படுகிறோம். அதே வேளையில், நாம் நம்பும்போது நம் குடும்பம் முழுவதையுமே இரட்சிக்க நம் தேவன் வல்லவராயிருக்கிறார்.

நோவா மாத்திரம்தான் தேவனை நம்பி, அவரோடு நடந்து, அவருக்குக் கீழ்படிந்து வாழ்ந்து வந்தார். ஆனால் தேவன் அவருடைய குடும்பம் முழுவதையும் ஜலப்பிரளயத்திலே அழிந்து போகாதபடி இரட்சித்தார். முழுக்குடும்பமும் பேழையிலே காக்கப்பட்டதற்குக் காரணம் நோவாவின் நம்பிக்கையே.

பிரியமானவர்களே, இந்த உலகத்தில் பாவத்திலே வாழ்ந்து அழிந்துவிடாதபடிக்கு உங்கள் குடும்பம் முழுவதும் கிறிஸ்துவாகிய பேழைக்குள் காக்கப்பட வேண்டுமானால் நீங்கள் முதலாவது இயேசுவை நம்புங்கள். நிச்சயமாகவே உங்கள் முழுக்குடும்பமும் காக்கப்படும்.

அபிஷேகம்

‘வேதவாக்கியம் சொல்லுகிறபடி, என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப் போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார்’. யோவான் 7:38,39

இரண்டாவதாக, மேலே வாசித்த வசனத்தின்படி நாம் இயேசுவை நம்பும்போது பெறுகிற ஆசீர்வாதம் அபிஷேகம்.

இந்த பாவம் நிறைந்த உலகத்திலே பரிசுத்தமாக வாழும்போது மாத்திரமே தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதங்களுக்கு பாத்திரவான்களாய் மாற முடியும்.

ஆனால் நாம் எப்படி பரிசுத்தமாக வாழ முடியும்?

பரிசுத்த ஆவியானவரின் துணையோடு மாத்திரமே நாம் பரிசுத்தமாக வாழ முடியும்.

வேதம் சொல்லுகிறது, ‘அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்’. யோவான் 16:8

இந்த பரிசுத்த ஆவியானவரை நாம் பெற்றுக்கொள்ள நமக்கு நம்பிக்கை அவசியம் தேவை. நம்பிக்கையோடு நாம் ஆண்டவரைப் பார்த்து ‘என்னை அபிஷேகியும்’ என்று கேட்கும்போது, கர்த்தர் தமது ஆவியானவரால் நம்மை அளவில்லாமல் அபிஷேகிப்பார்.

பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருக்கும்போது, நாம் இவ்வுலகில் பரிசுத்தமாக வாழ்ந்து தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்று வாழ முடியும்.

தெய்வீக ஆரோக்கியம்

‘விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்’. யாக்கோபு 5:15

அடுத்து, நம்பிக்கையின் மூலம் நாம் பெறக்   கூடிய மற்றொரு ஆசீர்வாதம் ஆரோக்கியம்.

பிரியமான சகோதரனே! சகோதரியே! நீங்கள் ஒருவேளை வியாதியினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால் இயேசுவை நம்பிக்கையோடு பாருங்கள். நிச்சயம் அவர் தம்முடைய தெய்வீக ஆரோக்கியத்தினால் உங்களை நிரப்புவார். வேதத்திலே அநேக வசனங்கள் ஆரோக்கியத்தைக் குறித்து எழுதப்பட்டுள்ளது.

‘நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்’. (யாத்திரகாமம் 15:26)

‘உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள், அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவார்’. (யாத்திரகாமம்.23:25)

‘அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்’. (ஏசாயா 53:5)

‘அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்’. (மத்தேயு.8:17)

‘என் கிருபை உனக்குப் போதும் பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்.’ (II.கொரிந்தியர் 12:9)

மேற்கண்ட வசனங்களை நம்பும்போது நமக்கு தெய்வீக சுகம் கிடைக்கும்.

எனவே பிரியமானவர்களே! தேவனிடத்தில் நம்பிக்கையாயிருங்கள். தேவனின் விலையேறப்பெற்ற ஆசீர்வாதங்களுக்கு பாத்திரவான்களாய் மாறுங்கள்.

- சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.

மேலும் செய்திகள்