அற்புதம் தரும் ஆன்மிக தகவல்கள்

* மனதில் பணிவு வரவேண்டும் என்று விரும்பினால், கோவில் திருப்பணிகள் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

Update: 2018-11-08 10:51 GMT
* அண்டங்கள் அனைத்தும். அன்னை கோமதியின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. ‘லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திர’த்தை, யார் பிறருக்கு ‘எப்படி ஜெபிக்க வேண்டும்?’ என்று சொல்லித் தருகின்றார்களோ, அவர்களுக்கு அன்னை கோமதியின் அருள் கிட்டும்.

* யாரிடமும், எப்போதும், எதையும் இலவசமாகப் பெறக்கூடாது. அப்படி வாங்கினாலே பெருமளவு புண்ணியத்தை நாம் இழக்கின்றோம் என்று அர்த்தம்.

* கோவில் உழவாரப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டால், நமது மனதில் இருக்கும் வக்ர எண்ணங்கள் விலகும். தேவையற்ற தீய எண்ணங்கள் கரைந்து மனம் சுத்தமாகும்.

* ஐந்து முக ருத்ராட்சங்கள் 108 கோர்க்கப்பட்ட மாலையை, சிவநாமம் ஜபிக்கும் போது கழுத்தில் அணிந்து கொள்ளலாம். இதன் மூலமாக 90 நாட்கள் தினமும் ஜெபித்த புண்ணிய பலன் ஒரே நாளில் கிட்டிவிடும். இதே மாலையை கிரிவலம் செல்லும் போதும், பிரதோஷ நாட்களில் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளும் போதும் கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.

* மிகுந்த சுயகட்டுப்பாடும், ஆன்மிகத்தில் சில குறிப்பிட்ட நிலைகளை எட்டியப் பின்னரும் தான், 1008 ஐந்து முக ருத்ராட்சங்கள் கொண்ட மாலையை அணிய வேண்டும். அதுவரை இல்லறவாசிகள் அணிய வேண்டிய அவசியம் இல்லை;

* கடந்த 16 முற்பிறவிகளில் மனிதப் பிறவி எடுத்து, ஒவ்வொரு பிறவியிலும் சிவத் தொண்டு ஆற்றியிருந்தால் மட்டுமே, இப்பிறவியில் 108 ருத்ராட்சங்கள் கொண்ட மாலையை அணியும் புண்ணிய சந்தர்ப்பம் ஒருவருக்கு கிட்டும். மற்றவர்களுக்கு இது ஒரு விளையாட்டாகத் தான் இருக்கும்.

* கூடாத நாட்களில் பிறந்தவர்கள் சுயம்பு லிங்க ஆலயத்தில் தமது வாழ்நாள் முழுவதும் சிவத் தொண்டு புரிந்து கொண்டே இருக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த விதமான மாற்றுப் பரிகாரமும் இல்லை. ஞாயிற்றுக்கிழமையும் பரணி நட்சத்திரமும், திங்கட்கிழமையும் சித்திரை நட்சத்திரமும், செவ்வாய்க் கிழமையும் உத்ராடம் நட்சத்திரமும், புதன் கிழமையும் அவிட்டம் நட்சத்திரமும், வியாழக்கிழமையும் கேட்டை நட்சத்திரமும், வெள்ளிக்கிழமையும் பூராடம் நட்சத்திரமும், சனிக்கிழமையும் ரேவதி நட்சத்திரமும் இணைந்து வருவதை கூடாத நாட்கள் என்று சிலாதர் மகரிஷி தெரிவிக்கின்றார்.

* சிவாலயங்களில் நாகலிங்க மரம் வளர்ப்பது பெரும் புண்ணியம் தரும்; எங்கெல்லாம் நாகலிங்க மரம் இருக்கின்றதோ, அங்கே ஈசனின் உடுக்கை ஒலி பரவிக்கொண்டே இருக்கின்றது.

* சென்னையில் மாடம்பாக்கம் கேம்ப்ரோடு பகுதியில் தேனுகாம்பாள் சமேத தேனுபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு காமதேனுவின் குளம்பு பதிந்த தெய்வீக கொம்பினால் ஆன லிங்கம் உள்ளது. இது ஒரு கோடி லிங்கங்களுள் ஒன்றாக அமைந்திருக்கும், அரிதிலும் அரிதான சிவலிங்கம் ஆகும். கோடிக்கணக்கான கோமாதாக்களை ஒரே நேரத்தில் தரிசித்த புண்ணியம், இந்த தேனுபுரீஸ்வரரை தரிசித்தால் கிடைக்கும்.

* மாசி மகம் வரும் நாளன்று சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரரை காராம்பசுவின் பாலை கறந்து, அதன் சூடு ஆறும் முன்பே அபிஷேகம் செய்துவிடவேண்டும். இப்படிச் செய்தால் 40 ஆண்டுகள், 50 ஆண்டுகள், 60 ஆண்டுகள் வறுமையில் உழல்வோர், அதில் இருந்து மீண்டு விடுவர். கடன் தொல்லையாலேயே வாழ்ந்து வருபவர்கள் அதிலிருந்து மீள்வார்கள்.

* எல்லாப் பிரச்சினைகளுக்கும், சாபங்களுக்கும் ஒரே தீர்வு என்று எதுவும் கிடையாது. ஆனால், அனைத்து பிரச்சினைகளும், சாபங்களும் விலகிட, குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் வரை தினமும் ‘ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ’ என்று ஜபிக்க வேண்டும். தேய்பிறை அஷ்டமி நாட்களில் மஹாகால பைரவப் பெருமானின் சன்னிதியில், இந்த மந்திரத்தை ஜெபிப்பது அதிகபட்சமான பலனைத் தரும்.

* நாகலிங்கப் பூவை வீட்டில் சிவலிங்கமாக வைத்து பூஜிக்கலாம். ஆனால், நாகலிங்கப் பூவை ஈசனுக்கு சாற்றி, நமது பெயர் சொல்லி அர்ச்சனை செய்திருக்க வேண்டும். அதன் பிறகு, வீட்டின் பூஜை அறையில் நாகலிங்கப் பூவை சிவலிங்கமாக எண்ணி தினமும் பூஜை செய்யலாம். நமது கோரிக்கைகளை வேண்டிக் கொள்ளலாம். அர்ச்சனைக்குப் பயன்படுத்தப்பட்ட நாகலிங்கப் பூவை வீட்டில் வைத்து சிவனுக்கு இணையாக மரியாதை கொடுத்து தினமும் பூஜை செய்ய வேண்டும். வீட்டில் யாராவது வாழ்நாளின் இறுதிப்பகுதியில் இருந்தால், அவரது தலையணைக்கு அடியில் இந்த நாகலிங்கப் பூவை வைக்க வேண்டும். இதனால், அந்த ஆத்மா தமது வாழ்நாள் நிறைவடைந்ததும் திருக்கயிலாயம் சென்றடையும்.

* பெரும்பாலான சிவாலயங்கள் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். அரிதாக மேற்கு அல்லது தெற்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் சிவாலயங்கள் பரிகாரக் கோவில்கள் ஆகும். இங்கே செய்யப்படும் பரிகாரங்கள் உடனுக்குடன் பலன் தரக் கூடியவை.

* சித்தர் பெருமக்கள் மட்டும் தான் அண்ணாமலையை கிரிவலம் வருகின்றார்கள் என்று எண்ணுகின்றோம். இந்திரன், பிரம்மா, மகாவிஷ்ணு, அனுமன், சப்த கன்னியர்கள், எட்சிணிதேவிகள், கந்தர்வர்கள் போன்றவர்களும் தினமும் அண்ணாமலையை கிரிவலம் வருகின்றார்கள்.

மேலும் செய்திகள்