பொங்கலில் சொர்க்கவாசல்

நவ திருப்பதிகளில் முதல் தலம் ஸ்ரீவைகுண்டம். இந்த ஆலயத்தில் இறைவன் கள்ளபிரானுக்கு, பொங்கல் அன்று 108 போர்வைகள் போர்த்தி அலங்கரிப்பார்கள். பெருமாள் கொடி மரத்தை வலம் வந்த பின்னர், ஒவ்வொரு போர்வையாக அகற்றி அலங்காரத்தைக் கலைப்பார்கள்.

Update: 2019-01-08 05:42 GMT
பொங்கலுக்கு முன்தினமான போகி பண்டிகை அன்று, புதுச்சேரி அருகே உள்ள நல்லாத்தூர் நாராயணன் ஆலயத்தில் ஆண்டாளுக்கு திருமண விழா நடத்துவார்கள். அன்று ஆண்டாளுக்கு சூட்டிய மாலைகளை திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு வழங்குவார்கள். அதைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதைக் காண முடியும்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு தைப் பொங்கல் அன்று, 5008 கரும்புகளைக் கொண்டு அலங்காரம் செய்வார்கள்.

இமாச்சலத்தில் உள்ள காக்ராவஜ்ரேஸ்வரி ஆலயத்தில், அம்மனுக்கு சங்கராந்தி அன்று மருந்து வழிபாடு செய்வார்கள். அம்மன் அரக்கனுடன் போரிட்டு அவனை அழித்த போது ஏற்பட்ட காயத்தை மருந்திட்டு ஆற்றிக்கொண்டதன் நினைவாக, இதை பொங்கல் தினத்தில் செய்து வழிபடுகிறார்கள்.

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் அருகில் தர்ம சாஸ்தா திருத்தலம் உள்ளது. இதன் அருகே அண்ணப்ப சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. வருடத்தில் பொங்கல் தினத்தன்று மட்டும் தான் இந்த ஆலயம் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே வழிபடும் ஆலயம் இது.

மகர சங்கராந்தி அன்று சபரிமலை ஐயப்பன், பொன்னம் பல மேட்டில் ஜோதி ரூபமாக பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்த நேரத்தில் ஐயப்பன் கருவறையில் தனது தந்தை ராஜசேகரன் வழங்கிய தங்க நகைகளை அணிந்து ராஜ அலங்காரத்தில் தந்தைக்குக் காட்சி அளிப்பார்.

பொதுவாக வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். ஆனால் கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்தில் மகரசங்கராந்தி அன்று தான் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்