தோஷம் போக்கும் நவக்கிரக வழிபாடு

கோவிலுக்கு செல்பவர்கள் அங்குள்ள நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபட்டால், அந்த நவ நாயகர்களின் அருள் கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கை வைத்துள்ளனர்.

Update: 2019-01-22 07:35 GMT
சிலருக்கு ஜாதக ரீதியாக குறிப்பிட்ட நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷம் காரணமாக நற்செயல்கள் கூடி வருவது தள்ளிப்போகலாம். சிலர் கஷ்டங்களை அனுபவிக்கலாம். இவற்றை போக்க கிரக தோஷ பரிகாரங்களை மேற்கொள்ளலாம். நவக்கிரகங்களை பற்றியும், அவற்றின் தோஷங்கள் விலகுவதற்கான எளிய பரிகாரங்களையும் இங்கே பார்க்கலாம்.

சூரியன்: காசியப முனிவரின் மகன். ஒளிப்பிழம்பானவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சந்திரன், செவ்வாய், குரு ஆகியவை நட்பு கிரகங்கள். புதன் சமமான கிரகம், சுக்ரன், சனி, ராகு-கேது ஆகியவை பகை கிரகமாகும். அதி தேவதை அக்னி, உச்ச ராசி மேஷம், நீச்ச ராசி துலாம். சூரியனுக்கான நட்சத்திரங்கள் உத்திரம், கிருத்திகை, உத்திராடம். தசாபுத்தி காலம் 6 ஆண்டுகள். நைவேத்தியம் சர்க்கரை பொங்கல்.

சூரியன் லக்னத்தில் இருந்து 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் உச்சம் பெற்று நின்றால், அதிக அளவில் சுப பலனைத் தருவார். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் உயர்வான இடத்தில் இருந்தால், அந்த நபர் ஆரோக்கியம், ஐஸ்வரியம், சந்தான பாக்கியம், நீண்ட ஆயுள், அரசு வேலைவாய்ப்பு, அரசியல் யோகம் பெறுவார். அதே நேரம் நீச்சம் பெற்றிருந்தால் ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, உஷ்ண ரோகம், எலும்பு பிரச்சினை வரலாம்.

சூரியனால் ஏற்படும் தோஷம் நீங்க, ஞாயிற்றுக்கிழமையில் கோதுமை, செம்பு பாத்திரங்களை தானம் செய்யலாம். பார்வை இழந்தவர்களுக்கு உணவளிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை கோதுமை மீது 10 தீபம் ஏற்றி வழிபட சூரியனின் அருளைப் பெறலாம்.

சந்திரன் : பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர். வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர். கடக ராசிக்கு அதிபதி. சூரியன், புதன் இருவரும் சந்திரனின் நட்பு கிரகங்கள். செவ்வாய், குரு, சுக்ரன் ஆகியவை சமமான கிரகங்கள். ராகுவும் கேதுவும் பகை கிரகங்கள். சந்திரனின் நட்சத்திரங்கள் ரோகிணி, அஸ்தம், சித்திரை. சந்திரனின் தசா புத்தி காலம்- 10 ஆண்டுகள். இவரது அதி தேவதை நீர் ஆகும். உச்ச ராசி ரிஷபம், நீச்ச ராசி விருச்சிகம்.

சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் 1, 2, 3, 4, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் நின்று உச்சம் பெற்றால், நல்ல சுப பலன்களை அதிக அளவில் கொடுப்பார். தாய் பாசம், குடும்ப பாசம், விவசாய விருத்தி, கடல் வணிகம், கல்வி ஸ்தாபனம், பால் மற்றும் உணவு வணிகள் சிறப்பான லாபத்தை அளிக்கும். அதே நேரம் 6, 8, 10, 12 ஆகிய இடங்களில் தேய்பிறை சந்திரனாக நின்று நீச்சம் பெற்றால், ரத்த சோகை, நீர் சம்பந்தமான வியாதி, தொண்டை பிரச்சினை, விரும்பிய வாழ்க்கை அமைய கால தாமதம் ஏற்படும்.

சந்திரனின் தோஷம் நீங்க, திங்கட்கிழமை அம்பாள் சன்னிதி முன்பு நெல் மீது 11 தீபம் ஏற்றுங்கள். திங்கட்கிழமைகளில் அசைவத்தை தவிர்ப்பது, பவுர்ணமி விரதம் இருப்பது நல்லது. பச்சரிசியை தானம் தரலாம்.

செவ்வாய்: இவர் வீரபத்திரர் அம்சம். சுப்பிரமணியரை தெய்வமாக கொண்ட இவர், பாவ பலனை கொடுக்கும் குரூரர். இவருக்கு சூரியன், சந்திரன், குரு நட்பு கிரகங்களாகும். சுக்ரனும், சனியும் சமமான கிரகங்கள். புதன், ராகு-கேது பகை கிரகங்கள். செவ்வாய் கிரகத்தின் நட்சத்திரங்கள் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம். இவரது தசாபுத்தி காலம் 7 ஆண்டுகள். இவருக்கு உச்ச ராசி மகரம், நீச்ச ராசி கடகம் ஆகும்.

செவ்வாய் கிரகமானது ஒருவரது ஜாதகத்தில், 3, 6, 11 ஆகிய இடங்களில் இருப்பது 100 சதவீத சுப பலன்களைத் தரும். செவ்வாய் ஆட்சி பலம் பெற்றிருந்தால் தலைமை பதவி, ரியல் எஸ்டேட், சகோதர உதவி, எதிரியை வெல்லும் துணிச்சல் வந்து சேரும். செவ்வாய் நீச்சம் பெற்றிருந்தால், சிறைவாசம், உடலில் ஆறாத காயம், திருமண தடை, பிரச்சினைகள் தோன்றிக்கொண்டே இருப்பது, பித்த நோய் உண்டாகக்கூடும். செவ்வாய்க்கிழமைகளில் வெண் பொங்கல் நைவேத்தியமாக படைத்து வைத்து, செண்பக மலர் தூவி 108 முறை செவ்வாய் கிரக துதியை படியுங்கள்.

புதன்: இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு. இவருக்கு சூரியனும் சுக்ரனும் நட்பு கிரகங்கள், செவ்வாய், குரு, சனி, ராகு-கேது சமமான கிரகங்கள், சந்திரன் மட்டும் பகை கிரகமாகும். புதன் கிரகத்தின் நட்சத்திரங்கள் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவையாகும். புதனின் தசாபுத்தி காலம் 17 ஆண்டு. புதனின் அதி தேவதை திருமால்.

புதன் கிரகமானது ஒருவரது ஜாதகத்தில் 2, 4, 6, 8, 10, 11 ஆகிய இடங்களில் உச்சம் பெற்றிருந்தால், அந்த நபர் 100 சதவீதம் சிறப்பான பலனைப் பெறுவது உறுதி. புதன் நல்ல இடத்தில் இருந்தால் கல்வியில் வெற்றியும், இசை, கவிதை, ஞானம் ஏற்படும். பூர்வீக சொத்து சேரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். நீதி துறையிலும், கணிதத் துறையிலும் மேதையாகும் யோகமுண்டு. புதன் நீச்சம் பெற்றிருந்தால், மந்த புத்தி, குடும்ப பிரச்சினை, தொழில் தடை, மனக்குழப்பம், தோல் வியாதி வந்து சேரும். புதன் கிரக தோஷங்கள் அகல, மகாவிஷ்ணுவை வழிபாடு செய்யுங்கள். புதன்கிழமை புதன் ஓரையில் புதன் காயத்ரி மந்திரம் சொல்லி வருவது நல்லது. மதுரை மீனாட்சி வழிபாடு நன்மை தரும். புதன்கிழமை அசைவத்தை தவிர்த்து, துளசி பொடி சாதம் சாப்பிடவும்.

குரு: இவர். பூரண சுப கிரகம் என்பதால், இவரது பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். சூரியன், சந்திரன், செவ்வாய் இவருக்கு நட்பு கிரகங்கள். சனி, ராகு-கேது சமமான கிரகங்கள். புதனும் சுக்ரனும் பகை கிரகங்கள். குருவின் நட்சத்திரங்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி. இவரது தசாபுத்தி காலம் 16 ஆண்டுகள் ஆகும். குருவின் அதி தேவதை பிரம்மன், உச்ச ராசி கடகம், நீச்ச ராசி மகரம்.

குரு, லக்னத்தில் இருந்து 2, 5, 7, 9, 11 ஆகிய இடத்தில் நின்றால் அதிக சுப பலன்களைத் தருவார். அவரே உச்சம் பெற்றிருந்தால் நல்ல ஞானம், படிப்பில் உயர்வு, அரசுப் பணி, பணப்புழக்கம், நல்ல மண வாழ்க்கை, குழந்தை பாக்கியம், நிரந்தர பணி, உடல் ஆரோக்கியம், ஜோதிட ஞானம், லட்சுமி கடாச்சம் ஏற்படும். அதே வேளையில் நீச்சம் பெற்றிருந்தால் மறதி, பக்தி குறைவு, மூளைக்காய்ச்சல், புத்திர பாக்கியம் தடை, உடல் சோர்வு, பணப்பிரச்சினை, குடும்ப பிரச்சினை தோன்றும். வீட்டில் பொன் பொருள் தங்காது.

குருவின் தோஷம் விலக, வியாழக்கிழமை அசைவத்தை தவிர்த்து, 16 வியாழக்கிழமை இரவு கொண்டை கடலையை மஞ்சள் துணியில் முடிந்து, தலையணை அடியில் வைத்து படுத்து, 17-வது வாரம் ஓடும் நீரில் விடவேண்டும்.

சுக்ரன்: அசுர குருவான இவரும் சுப கிரகம் தான். புதன், சனி, ராகு-கேது ஆகியவை இவருக்கு நட்பு கிரகங்கள். செவ்வாய், குரு போன்றவை சமமான கிரகங்கள். சூரியன், சந்திரன் இருவரும் பகை கிரகங்கள். சுக்ரனின் நட்சத்திரங்கள் பரணி, பூரம், பூராடம் ஆகும். சுக்ரனின் தசாபுத்தி காலம் 20 வருடங்கள். இவரது அதிதேவதை லட்சுமி, உச்ச ராசி மீனம், நீச்ச ராசி கன்னி.

சுக்ரன் ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 1, 2, 3, 4, 5, 8, 9, 11 ஆகிய இடங்களில் நின்றால் அதிக சுப பலன் களைத் தருவார். நீச்சம் பெற்றிருந்தால் உயிர் அணுக்கள் குறைபாடு, திருமண கால தாமதம், அவப்பெயர், சிறை தண்டனை, உறவில் பிரிவு, தொழில் நஷ்டம் உண்டாகும்.

சுக்ரனின் தோஷம் விலக, வெள்ளிக்கிழமை அன்று சுக்ர ஓரையில் ராஜராஜேஸ்வரியை வழிபடுவதோடு விரதம் இருப்பது சிறந்தது. வெள்ளை நிற ஆடை, மொச்சை தானம் வழங்கலாம்.

சனி: இவர் சூரியனுடைய குமாரர். இவருக்கு புதன், சுக்ரன், ராகு-கேது ஆகியோர் நட்பு கிரகங்கள். குரு சமமான கிரகம், சூரியன், சந்திரன், செவ்வாய் மூவரும் பகை கிரகங்கள். சனியின் நட்சத்திரங்கள் பூசம், அனுஷம், உத்திரட்டாதி. சனியின் தசா புத்தி காலம் 19 ஆண்டுகள். சனியின் அதி தேவதை எமதர்மன், உச்ச ராசி துலாம், நீச்ச ராசி மேஷம்.

சனி கிரகமானது ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து, 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் நின்றால் அதிக சுப பலனைத் தருவார். உச்சம் பெற்றிருந்தால் தீர்க்க ஆயுள், விவசாயம், இரும்பு, எண்ணெய் தொழிலில் யோகம், கல்வி ஞானம், பொன், பொருள் சேர்க்கை, வாகன யோகம், வெளிநாட்டு யோகம், தலைமைப் பதவி, சுயதொழில் யோகம் தருவார். அதுவே நீச்சம் பெற்றிருந்தால், தீராத பிணி, நரம்பு சோர்வு, மனைவி, குழந்தை வழியில் அவப்பெயர், தொழிலில் பின்னடைவு, வழக்குகள் உண்டாகும்.

சனியின் தோஷம் விலக, அண்டங் காக்கைக்கு எள் கலந்த சாதம் வைக்க வேண்டும். பாதாள சனியையும், குடும்பத்துடன் உள்ள சனியையும் ஒரே நாளில் வழிபட வேண்டும்.

ராகு: இவர் அசுரத் தலையும், நாக உடலும் கொண்டவர். மிகுந்த வீரம் உடையவர். ‘கருநாகம்’ என்று அழைக்கப்படுபவர். இவருக்கு சனியும், சுக்ரனும் நட்பு கிரகங்கள். புதன், குரு சமமான கிரகங்கள். சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோர் பகை கிரகங்கள். ராகுவின் நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவையாகும். இவரது தசாபுத்தி காலம் 18 ஆண்டுகள். அதிதேவதை காளி மற்றும் துர்க்கை, இவரது உச்ச ராசி விருச்சிகம், நீச்ச ராசி ரிஷபம் ஆகும்.

ராகு ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 3, 6, 11 ஆகிய இடங்களில் நின்றால் அதிக சுப பலனைத் தருவார். உச்சம் பெற்றிருந்தால் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். மறைமுக வருமானம், குடும்ப ஒன்றுமை, வெளிநாட்டு பயணம், நல்ல மண வாழ்க்கை, பூர்வீச சொத்து, அரசியல் ராஜ்ஜிய சுகம் போன்றவை கிடைக்கும். அதே நேரம் நீச்சம் பெற்றிருந்தால் பாம்பு தீண்டுதல், சிறைவாசம், பொருள் களவு போகுதல், குடிப்பழக்கம், தோல் சார்ந்த நோய்கள், மனக்குழப்பம் தோன்றும்.

ராகு தோஷம் விலக, இரண்டு சர்ப்பம் சேர்ந்து உள்ள கருங்கல் சிலைக்கு பூஜை செய்ய வேண்டும். ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு செய்யலாம்.

கேது: இவர் நாகத் தலையும், அசுர உடலும் கொண்டவர். சிகி என்றும், செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர். இவருக்கு சனியும், சுக்ரனும் நட்பு கிரகங்கள். புதனும், குருவும் சமமான கிரகங்கள். சூரியன், செவ்வாய், சந்திரன் பகை கிரகங்கள். கேதுவுக்குரிய நட்சத்திரங்கள் அசுவினி, மகம், மூலம் ஆகும். கேதுவின் தசாபுத்தி காலம் 7 ஆண்டுகள். கேதுவின் அதிதேவதை சித்திரகுப்தன். உச்ச ராசி விருச்சிகம், நீச்ச ராசி ரிஷபம்.

கேது ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 3, 6, 11 ஆகிய இடங்களில் நின்றால் அதிக சுப பலன்களைத் தருவார். உச்சம் பெற்றிருந்தால் ஞான மோட்சம் ஏற்படும். ஆன்மிகம், ஆலய சேவை, மருத்துவ சேவை, பொன் பொருள், பூமி, வாகன யோகம் கிடைக்கும். குடும்பம் மகிழ்ச்சியுறும். ஆசிரம சேவை செய்வீர்கள். நீச்சம் பெற்றால் எதிரியால் பயம், தீய பழக்கம் ஏற்படும். கலைத் துறையில் பின்னடைவு, குடும்ப பிரிவு உண்டாகும்.

கேது தோஷம் விலக, செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரத்தில் கதம்ப சாதம் வைத்தும், கதம்ப பூ வைத்தும், கேது கவசம் படிப்பது நல்லது. மேலும் குதிரைக்கு எமகண்ட நேரத்தில் கொள்ளு தானம் செய்வதன் மூலம் நினைத்த எல்லா சுபகாரியம் தடையின்றி நடக்கும்.

மேலும் செய்திகள்