அரசர்கள் இரண்டாம் நூல்

யூதா நாடு எருசலேமைத் தலைமையிடமாகக் கொண்டிருந்தது. அவர்கள் சிறிய கூட்டம், ஆனால் அவர்களுடைய அரசர்கள் எல்லோருமே தாவீது மன்னனின் வழி வந்தவர்கள். இறைவனின் வாக்குறுதி அது.

Update: 2019-03-26 10:25 GMT
பைபிள் கூறும் வரலாறு

அரசர்கள் நூலின் இரண்டாம் பாகம் இது. தொடக்கத்தில் ஒரே நூலாக ‘அரசாங்கம்’ என இருந்த நூல் கிரேக்க மொழிபெயர்ப்புக்குப் பின் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது.

இதை எழுதியவர் எரேமியா என்பது மரபுச்செய்தி. எசேக்கியேல் அல்லது எஸ்ராவின் பங்களிப்பும் இருந்திருக்க வேண்டும் என்பது இறையியலார்களின் கருத்து.

கி.மு 850-600 ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த இந்த நூலின் நிகழ்வுகள், சுமார் கி.மு 560-538-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டது. மிக முக்கியமான பல்வேறு நபர்கள் இந்த அரசர்கள் நூலில் இடம்பெற்றுள்ளனர். எலியா, எலீசா, சூனேமியாள், நாமான், ஈசபேல், ஜோவாஸ், எசேக்கியா, ஏசாயா, மனாசே உட்பட பல்வேறு பிரபலங்கள் இந்த இரண்டாம் நூலில் வருகின்றனர்.

இஸ்ரேல் மக்களினம் பன்னிரண்டு கோத்திரங்களால் ஆனது. இஸ்ரேல் மக்களை ஆள முதலில் வந்த மன்னன் சவுல். அவர் நாற்பது ஆண்டுகள் அரசாண்டார். அவருடைய ஆட்சி சிறப்பான ஆட்சியாய் இருக்கவில்லை.

அதன்பின் தாவீது மன்னர் வந்தார். அவரும் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது வாழ்க்கை இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கையாய் இருந்தது. பலவீனங்கள் இருந்தாலும் மீண்டும் மீண்டும் இறைவனை நாடிச்செல்லும் உன்னத மனம் அவரிடம் இருந்தது.

அதன் பின் அவரது மகன் சாலமோன் மன்னன் ஆனார். அவரும் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஞானத்திலும், செல்வத்திலும் உச்சியில் இருந்த அவர் கடைசி காலத்தில் பாவத்தின் பள்ளத்தாக்கில் விழுந்து மேன்மையை இழந்தார்.

அதன் பின் பன்னிரெண்டு கோத்திரங்களும் இரண்டாகப் பிரிந்தன. பத்து கோத்திரங்கள் ஒன்று கூடி வடக்கில் ‘இஸ்ரேல்’ என ஆட்சி அமைத்தன. யூதா, பென்யமீன் எனும் இரண்டு கோத்திரங்கள் தெற்கே ‘யூதா’ என ஆட்சியமைத்தன. இவர்கள் தான் பின்னாளில் யூதர்கள் என அழைக்கப்பட்ட மக்களினமாய் மாறினர். அதுவரை இவர்கள் எபிரேயர்கள் என்றோ, இஸ்ரேல் ஜனம் என்றோ தான் அழைக்கப்பட்டு வந்தனர்.

ஒப்பீட்டு அளவில் யூதா இனம் இறைவனுக்கு பிரியமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தது. இஸ்ரேலோ தொடர்ச்சியாய் பாவத்தில் விழுந்து கொண்டிருந்தது. அரசர்கள் நூல் இஸ்ரேல், யூதா இரண்டு நாடுகளின் மன்னர்களையும், இரண்டு நாடுகளுக்கு இடையே நடந்த யுத்தங்களையும், அவர்களுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவையும் பதிவு செய்கிறது.

வட நாடான இஸ்ரேல் நாட்டின் 130 ஆண்டு கால ஆட்சியையும் அதன் வீழ்ச்சியையும் பதிவு செய்யும் நூல், தென் அரசின் 250 ஆண்டு கால வரலாற்றைப் பதிவு செய்கிறது. இஸ்ரேல் நாடு கி.மு 721-ல் அசீரியர்களின் பிடியில் சிக்கியது. மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். அதன் பின் அவர்கள் மீண்டும் இஸ்ரேலில் நுழையவேயில்லை.

யூதா நாடு எருசலேமைத் தலைமையிடமாகக் கொண்டிருந்தது. அவர்கள் சிறிய கூட்டம், ஆனால் அவர்களுடைய அரசர்கள் எல்லோருமே தாவீது மன்னனின் வழி வந்தவர்கள். இறைவனின் வாக்குறுதி அது.

ஒரே ஒரு பெண் அரசி இந்த பட்டியலில் வருகிறாள். அத் தலியா எனும் அவள் தாவீதின் வழிமரபை அழித்து அரசியாகிறாள். அவளது ஆட்சி ஆறு ஆண்டுகள் நீடிக்கிறது. அவளிடமிருந்து தப்பிப்பிழைத்த யோவாசு பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்று தாவீதின் ஆட்சி மரபைப் தொடர்கிறான்.

வட நாடான இஸ்ரேல் நாட்டின் கடைசி பன்னிெரண்டு அரசர் களைப் பற்றியும், தென் நாடான யூதா நாட்டின் கடைசி பதினாறு அரசர்களைப் பற்றியும் இந்த நூல் பேசுகிறது. இந்த நூலில் 25 அதிகாரங்களும், 719 வசனங்களும், 23523 வார்த்தை களும் இடம்பெற்றுள்ளன.

எலியா, எலீசா ஆகியோரின் இறைவாக் குரைக்கும் பணி இந்த நூலின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. வட நாடான இஸ்ரேலில் அவர்கள் சுமார் எழுபத்தைந்து ஆண்டு காலம் இறைவாக் குரைத்தனர்.

சாலமோனை விடப் பெரியவர் இயேசு என்றும், யோனா மீன் வயிற்றில் இருந்ததைப் போல மனுமகன் மூன்று நாள் மண்ணில் இருப்பார் என்றும் புதிய ஏற்பாடு பேசுகிறது.

எலியாவை உருமாற்றத்தின் மலையில் இயேசு சந்திக்கிறார், எலிசாவைப் போன்ற புதுமைகளை இயேசு செய்கிறார் என புதிய ஏற்பாட்டோடு இந்த நூல் பின்னிப் பிணைந்திருக்கிறது.

ஆன்மிகமும், வியப்புகளும் நிரம்பியிருக்கும் இந்த நூலில் பல அதிசய நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இறைவாக்கினர் எலிசா இறந்த உடலுக்கு உயிர்கொடுக்கும் நிகழ்வும், எலிசா இறந்தபின் அவரது எலும்பில் விழுந்த பிணம் உயிர்பெற்ற அதிசயமும் இந்த நூலில் காணக்கிடைக்கிறது.

கடவுளுக்கு பணிந்து அவரது கட்டளைகளின்படி நடந்தால் கிடைக்கின்ற வாழ்க்கையும், அவரது குரலுக்குச் செவிகொடுக்க மறுத்தால் கிடைக்கின்ற அழிவையும் இந்த நூல் விளக்குகிறது.

‘மனம் திரும்பு, இறைவனை விரும்பு’ என்பதே இந்த நூலின் வாயிலாக இறைவன் நமக்குச் சொல்லும் செய்தியாகும்.

சேவியர்

மேலும் செய்திகள்