அபிஷேகத்தால் குளிர்விக்கப்படும் இறைவன்

மார்கழி மாதத்தில் வரும் ஆருத்ரா தரிசனம். மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரமும், பவுர்ணமி தினமும் இணையும் நாளில் ஆருத்ரா தரிசனம் நடத்தப்படுகிறது.

Update: 2022-08-16 15:34 GMT

சிவபெருமானை வழிபடுவதற்கு 'மகாசிவராத்திரி' எப்படி ஒரு சிறப்பான தினமோ, அதேபோல ஈசனின் திருவடிவங்களில் ஒன்றான நடராஜப் பெருமானை வழிபடுவதற்கு 'ஆருத்ரா தரிசனம்' சிறப்பு மிக்க ஒரு தினமாகும். 'சிவம்' என்பது அனைத்தையும் தனக்குள் அடக்கி வைத்துக் கொண்டு அசையாதிருப்பது. அதுவே நடராஜர் என்பவர், ஆனந்த நடனம் ஆடி உலகின் அனைத்து இயக்கங்களுக்கும் ஆற்றலாக இருப்பவர்.

அப்படிப்பட்ட நடராஜப் பெருமானை வழிபடுவதற்கு உகந்த தினம்தான், மார்கழி மாதத்தில் வரும் ஆருத்ரா தரிசனம். மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரமும், பவுர்ணமி தினமும் இணையும் நாளில் ஆருத்ரா தரிசனம் நடத்தப்படுகிறது. இந்த தினத்தில் நடராஜருக்கு ஆறுவிதமான அபிஷேகங்களைச் செய்து அவரை குளிர்விப்பார்கள்.

ருத்ரன் என்பவர் மிகவும் அக்னி வடிவமாக இருப்பவர். அவருக்கு குளிர் மிகுந்த மார்கழி மாதத்தில், அந்த மாதத்திலேயே அதிக குளிர்ச்சி நிறைந்த திருவாதிரை நாளில், ஆறுவிதமான அபிஷேகம் செய்து குளிரூட்டி வெப்பத்தை தணிக்கிறார்கள்.

இந்த அபிஷேகத்தைக் கண்குளிரக் காணும் வைபவம் என்பதாலேயே, இது 'ஆருத்ரா தரிசனம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளை 'மார்கழி திருவாதிரை' என்றும் சொல்வார்கள். நடராஜர் உலக ஜீவராசிகளுக்கு அருள்பாலிக்கும் வகையில் திருவாலங்காட்டில் ரத்தின சபை, சிதம்பரத்தில் பொற்சபை, மதுரையில் வெள்ளிசபை, திருநெல்வேலியில் தாமிரசபை, குற்றாலத்தில் சித்திரசபை ஆகிய பஞ்ச சபைகள் இருக்கின்றன.

இருப்பினும் ஆருத்ரா தரிசனம் நிகழ்வதில் தனித்துவம் பெற்ற தலங்களாக இரண்டு தலங்கள்தான் விளங்குகின்றன. அவை, சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் மற்றும் ஆதி சிவன் கோவில் என்று அழைக்கப்படும் திருஉத்திரகோசமங்கை திருக்கோவில் ஆகும்.

நட்சத்திரங்களிலேயே இரண்டு நட்சத்திரங்கள்தான், 'திரு' என்ற அடைமொழியைப் பெற்றுள்ளன. ஒன்று திருமாலுக்கு உகந்த 'திருவோணம்' நட்சத்திரம். மற்றொன்று சிவபெருமானுக்கு உகந்த 'திருவாதிரை' நட்சத்திரம். அந்த சிறப்புமிக்க திருவாதிரை நாளில் நடராஜரின் ஆருத்ரா தரிசனத்தைக் காண்பதோடு, அவரது ஆனந்த தாண்டவத்தையும் தரிசித்து துன்பங்களில் இருந்து மீள்வோம்.

Tags:    

மேலும் செய்திகள்