மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா: 63 நாயன்மார்கள் திருவீதி உலா

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி இன்று நடந்த 63 நாயன்மார்கள் திருவீதி உலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-03-23 15:47 GMT

தமிழகத்தில் ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை எத்தனையோ சிவனடியார்கள் தோன்றி இருந்தாலும் கி.பி. 400–ம் ஆண்டு முதல் ஆயிரம் ஆண்டு வரை வாழ்ந்த சிவனடியார்களில் 63 பேர் 'நாயன்மார்கள்' என்று போற்றப்படுகின்றனர். இவர்களில் 'சைவ சமயக்குரவர்கள்' என்று அழைக்கப்படும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் சிவபெருமானுக்கு சேவை செய்ததால், இவர்களையே சிவபெருமானின் பிரதிபலிப்பாக கருதி பக்தர்கள் பூஜை செய்து வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நடந்து வரும் பங்குனி திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று 63 நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதற்காக 63 நாயன்மார்கள் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஏற்றப்பட்டு கோவிலில் இருந்து கோபுர வாசலில் உள்ள 16 கால் மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அங்கம் பூம்பாவையாக்கி அருளுதல்

நாயன்மார்கள் பல்லக்குக்கு முன்பாக மயிலாப்பூரின் கிராம தேவதை கோலவிழி அம்மன், விநாயகர், கபாலீசுவரர், கற்பகாம்பாள், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேசுவரர் மற்றும் முண்டககண்ணியம்மன், அங்காளபரமேஸ்வரி, வீரபத்திரர் சுவாமிகள் தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளினர். பல்லக்குகள் முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்து அடைந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 அப்போது, பெண்கள் பலர் கோவிலை சுற்றி உள்ள மாடவீதிகளில் மண்பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து சாமிக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கினர். இவ்வாறு செய்வதன் மூலம் தீராத நோய்களும் குணமடையும் என்பது நம்பிக்கையாகும். முன்னதாக இன்று காலையில் திருஞானசம்பந்தர் சுவாமிகள் எழுந்தருளல் நிகழ்சியும், பிற்பகலில் 'அங்கம் பூம்பாவையாக்கி அருளுதல்' நிகழ்ச்சியும் நடந்தது.

சைவ சித்தாந்த மன்றம் அன்னதானம்

மயிலாப்பூரில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு பந்தல்கள் அமைத்தும், வீட்டு முற்றங்களிலும் நீர்மோர், குளிர்பானங்கள், அன்னதானம் வழங்கினர். மயிலாப்பூர் சைவசித்தாந்த பெருமன்றம் சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் நல்லூர் சா.சரவணன் மற்றும் உறுப்பினர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். இது தவிர பல்வேறு ஆன்மீக அமைப்புகளை சேர்ந்தவர்களும் அன்னதானம் வழங்கினர். மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன. விழா கோலாகலமாக நடந்தது.

விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்