பெரியசேமூர் செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா:பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

பெரியசேமூர் செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.;

Update:2023-03-30 03:57 IST

பெரியசேமூர் செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

செல்வமுத்து மாரியம்மன் கோவில்

ஈரோடு பெரியசேமூர் தென்றல் நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற செல்வமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொங்கல் திருவிழா கடந்த 21-ந்தேதி கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து அன்று அம்மனுக்கு சீர் வைத்தல், பூச்சாட்டுதல் நடந்தது. பின்னர் கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது. இந்த கம்பத்துக்கு தினந்தோறும் பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். அதன் பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அலகு குத்தி நேர்த்திக்கடன்

நேற்று காலை 6 மணிக்கு பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். இதையொட்டி செல்வமுத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை 6 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு வந்தனர். இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு கோவில் முன்பு நடப்பட்டு உள்ள கம்பம் பிடுங்கப்பட்டு காவிரி ஆற்றில் விடப்படுகிறது. பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்